இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகிறார் கங்குலி?
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த அனுராக் தாக்கூர் நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, கங்குலி நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து லோதா கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை செய்ததையடுத்து பரிந்துரைகள் அனைத்தையும் அமல்படுத்த வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆனால் லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாமல் கிரிக்கெட் வாரியம் காலம் தாழ்த்தியது.
இதனால், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை நீக்கி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதையடுத்து, செல்வாக்குமிக்க இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை ஏற்கப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சுப்ரீம் கோர்ட்டு இந்த பணிக்கு தகுதியான நபரை அடையாளம் கண்டு 2 வாரத்துக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என்று மூத்த வக்கீல்களான பாலி நாரிமன், கோபால் சுப்பிரமணியம் ஆகியோரை நியமித்துள்ளது.
இந்நிலையில் முன்னாள் அணித்தலைவர் சவுரவ் கங்குலி கிரிக்கெட் வாரிய நிர்வாக கூட்டங்களில் பங்கேற்ற அனுபவம் இருப்பதாலும், தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்து வருவதாலும் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இவரை நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மேலும், இந்திய கிரிக்கெட் அரங்கில் புகழ்பெற்ற வீரராக விளங்கிய கங்குலியே இந்த பதவிக்கு பொருத்தமானவர் என்று முன்னாள் அணித்தலைவர் சுனில் கவாஸ்கரும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.