தமிழ்நாட்டு அரசியலில், நடிகர்களின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. சினிமாவில் நடித்து கிடைக்கும் புகழை வைத்து, அடுத்தபடியாக அரசியலிலும் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்தவரிசையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு பிறகு விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்டவர்கள் அரசியலுக்கு வந்தனர். இப்போது ரஜினி, கமல் ஆகியோரும் அரசியலில் களம் கண்டுள்ளனர். விரைவில் விஷால், விஜய்யும் களம் காண இருக்கிறார்.
கடந்த ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலிலேயே போட்டியிட முயற்சிடுத்தார் விஷால். ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து இது சம்பந்தமாக பிரதமரையெல்லாம் சந்திக்கப்போவதாக சொன்னார்.
இந்தநிலையில், சினிமா மற்றும் திருமண வேலைகளில் தீவிரமடைந்துள்ள விஷால், பார்லிமென்ட் தேர்தல் குறித்து கூறியிருப்பதாவது : பார்லிமென்ட் தேர்தல் தேதி அறிவிக்கவில்லை, அறிவிக்கட்டும், இடைத்தேர்தல் தொடர்பாகவும் பேசிக் கொண்டு இருக்கிறோம். இடைத்தேலில் போட்டியிடுவேன். பார்லிமென்ட் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று தேர்தல் தேதி அறிவித்த பிறகு முடிவெடுப்பேன். நிச்சயம் இந்த இரண்டு தேர்தல்களும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கும் முக்கியமானதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

