Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆளுநர் விவகாரம் – மன்னிப்போடு முடிந்துவிட்டதா

April 18, 2018
in News, Politics, World
0
ஆளுநர் விவகாரம் – மன்னிப்போடு முடிந்துவிட்டதா

பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பிய பெண் பத்திரிகையாளரின் கன்னத்தைத் தட்டிக்கொடுத்துவிட்டு பதில்கூறாமல் சென்ற ஆளுநரின் செய்கைக்கு, பல தரப்பிலிருந்தும் கண்டனம் வந்தவண்ணம் இருக்கிறது. பெண் பத்திரிகையாளர்களும் எழுத்தாளர்களும் ஆளுநரின் செய்கையை விமர்சித்து கருத்துக்கூறியுள்ளனர்.

இது பற்றிக் கேட்டதுமே, ஆவேசப்பட்ட பெண் பத்திரிகையாளர்களின் உணர்வைப் புரிந்துகொள்ள முடிந்தது.

பா.ஜீவசுந்தரி (பத்தி எழுத்தாளர்) :

”தன் மீதான குற்றச்சாட்டு குறித்து தானே விசாரிப்பது என்ன நியாயம்? செய்தியாளர் சந்திப்பிலும் கடைசியாகக் கொடுத்த மன்னிப்பு விளக்கத்திலும் ஆளுநர் தன்னை வயதானவர் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறார். கையெழுத்தைக்கூட தன்னால் போடமுடியாமல் இருப்பதாகச் சொல்கிறார். முன்னர் ஒரு மாநிலத்தில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய ஆளுநரும் இவரைவிட வயதானவர்தான்; இருந்தபோதும் அவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டது அம்பலமாகத்தான் செய்தது. வயதானவர்கள் பெண்களைத் தொடுவது பெண்களுக்குப் பிரச்னை இல்லை. யார் எப்போது எப்படி என்பதுதான் இங்கு சிக்கலே! யாராக இருந்தாலும் பெண்களிடம் கண்ணியத்தைக் காக்கவேண்டாமா? பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர், தன் முகத்தை பல முறை கழுவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார். உண்மைதான், பேருந்துகளில் தொடர்வண்டிகளில் அன்னியன் ஒருவன் இடித்துவிட்டுப் போனால், பூச்சி ஊர்வதைப்போல இருக்கும். எல்லா பெண்களுக்கும் இதே உணர்வு இருக்கும்.

மன்னிப்போடு முடிந்துபோகிற விசயம் அல்ல, இது; மிகப்பெரிய குற்றம். பின்தங்கிய பகுதிகளில் சமீபமாகத்தான் பெண்களைக் கல்லூரிகளில் சேர்த்து உயர்கல்வி பெறவைக்கிறார்கள். பிடிபட்டுள்ள பேராசிரியர் பேசியுள்ள விவகாரத்தில் அவர் மட்டும் இல்லை; பெரிய வலைப்பின்னலே இருப்பதுபோலத்தான் தெரிகிறது. இந்த விவகாரத்தைச் சரியான முறையில் விசாரித்து உண்மைகளைக் கொண்டுவராவிட்டால், பிற்போக்கான சூழல் உள்ள தென்மாவட்டப் பகுதிகளில் பெண்களை உயர் கல்விக்கு அனுப்ப பெற்றோர் முன்வருவார்களா?இது மட்டுமல்ல, ஆளுநர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க அவரே குழு அமைப்பாராம்; சிபிஐ விசாரணை கூடாது என்பாராம். இதெல்லாம் எவ்வளவு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். செய்தியாளர் சந்திப்பில்கூட அவர் பேசியது, தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்கமே இல்லை என்பதைத்தான் நிரூபிக்கிறது. ஒற்றை ஆளுக்கு இரட்டையர்களாக இருக்கிற ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். எங்கே? இப்படியெல்லாம் பதவியில் எதற்கு தண்டமாக இருக்கவேண்டும்? வீட்டுக்குப் போகவேண்டியதுதானே! காவிரி வாரியம் அமைக்கும் பிரச்னையிலிருந்து திசைதிருப்பக்கூட இந்த விவகாரம் கிளப்பிவிடப்படுகிறதோ எனும் சந்தேகமும் எழத்தான் செய்கிறது. தமிழ்நாட்டுக்குள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் போகக்கூட நாட்டின் குடிமக்களுக்கு உரிமை இல்லையா? ரயிலில் கதிராமங்கலம் மக்களைப் பார்ப்பதற்காக தஞ்சாவூருக்குச் சென்ற சேலம் மாணவி வளர்மதி உட்பட 5 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தார்கள். அவர்கள் இன்னும் விடுதலையாகவில்லை. இதைத்தான் சுதந்திரநாடு என்கிறோம்.செத்துப்போனால் பிணம் என்கிறோம். நம் அரசும் அப்படித்தான் இருக்கிறது. அதைத் தூக்கி எறியத்தான் வேண்டும். மக்களுக்கு உதவாத, செயல்படாத அரசு எதற்கு?”.

இராதிகா சுதாகர் ( பத்திரிகையாளர்)

”தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செவ்வாயன்று கூட்டிய ஊடகத்தினர் சந்திப்பில், ஒரு பெண் செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூறாமல் சிறு பிள்ளையைக் கன்னத்தில் தட்டிக்கொடுப்பதுபோல் செய்துவிட்டு கிளம்பிச்சென்ற ஆளுநரின் செயல்பாடு ஊடவியலாளர் அனைவரின் கண்டனத்திற்கும் உள்ளானது. புதனன்று காலையில், கிட்டத்தட்ட இருநூறு ஊடகத்தினர் கையெழுத்து இட்ட ஒரு கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் மன்னிப்புக் கேட்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநாளில், பாதிக்கப்பட்ட செய்தியாளர் லட்சுமி சுப்பிரமணியம், ஒரு மின்னஞ்சலையும் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலைப் பதிவுசெய்துள்ளார். ஊடகத்தினர் கூட்டாக அனுப்பிய கடிதமும் ஆளுநரின் குறிப்பிட்ட செய்கை சட்டப்படி குற்றம் என்பதை விளக்கியுள்ளது.

இதே வேளை, ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்கச்சொல்லி குடியரசுத் தலைவருக்குத்தான் கூட்டறிக்கை சென்றிருக்கவேண்டும்; குற்றவாளியிடமே கோரிக்கை வைப்பது முறையல்ல என்பதையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஆளுநரை ஒரு தனி நபராக மட்டும் பார்த்தால் மட்டுமே மென்மையாகக் கையாளமுடியும். ஆளுநரின் செயல்பாடு அவரது ஆணாதிக்க மற்றும் மதவாதப் பண்பாட்டு மனநிலையிலிருந்து வந்தது என்று பார்த்தால், இதை பெண்களுக்கான நீதியாக ஏற்றுக்கொண்டிருக்க முடியாது.

ஒரு பெண் பத்திரிகையாளரின் தகுதியை நிராகரிக்கும் மனநிலையிலிருந்து வரும் பண்பாட்டுச் செயல்பாட்டைத்தான் ஆளுநர் வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு எதிராகத்தான் காலம் காலமாக மனித உரிமைப் போராட்டங்கள் நடைபெற்றன, பெண்ணுரிமைப் போராட்டங்கள் நடைபெற்றன. இத்தனைக்கும் ஆளுநர் நேற்று கூட்டிய செய்தியாளர் கூட்டம் முன்னுதாரணம் இன்றி நடைமுறைகளுக்கு மாறாக கூட்டிய கூட்டம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக கல்லூரி மாணவிகளைப் பாலியல் விவகாரங்களில் ஈடுபட பேராசிரியர் வலியுறுத்திய வழக்கில், குற்றச்சாட்டுப் பார்வையில் வந்துவிட்ட ஆளுநர் தன்னைத் தற்காத்துக்கொள்ள தன்னிலை விளக்கம் கொடுக்க கூட்டப்பட்ட கூட்டம் என்பதை அனைவரும் அறிவர். அங்கேயும் அவர் இப்படி செயல்பட்டிருப்பது ஒரு தனிநபர்ச் செயல்பாடாகக் கடக்கக்கூடியதும் அல்ல.

மேலும், செய்தியாளர் சந்திப்பில் ஆளுநருடன் அமர வைக்கப்பட்டவர், குற்றப்பார்வையில் இருக்கும் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர். செய்தியாளர் கூட்டத்தில் சட்டத்தை மதிக்காமல் எனக்கே எல்லா அதிகாரமும் என்று மக்களாட்சி மாண்புக்கு எதிராகப் பேசினார் என்பதும் கருத்தில் கொண்டிருக்கப்பட வேண்டும். தற்போது, பாதிக்கப்பட்டவர் ஆளுநருக்கு கடிதம் எழுதினார், ஆளுநர் மன்னிப்பு கேட்டார், பாதிக்கப்பட்டவர் மன்னித்துவிட்டார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில் நாம் வாழ்வது மரத்தடி பஞ்சாயத்து காலத்தில் அல்ல; சட்ட நடைமுறைக் காலத்தில் இருக்கிறோம். திருடியவரையோ, கொலை செய்தவரையோ, பாதக செயல்களில் ஈடுபட்டவர்களையோ பாதிக்கப்பட்டவர் மன்னித்தாலும், சட்டம் மன்னிக்காது என்பதே நடைமுறை! பெண்களுக்கெதிரான ஒரு கிரிமினல் குற்றத்தில், பாதிக்கப்பட்டவர் மன்னித்துவிட்டார் என்பதால் சட்டம் நடைமுறைக்கு வராது என்ற ஒரு நிலையை, ஏனைய ஊடகவியலாளர்கள் ஏற்படுத்தக்கூடாது”.

செய்தியாளர்கள் செய்தியாகக்கூடாது என ஊடகங்களில் முந்தைய தலைமுறையினர் சொல்வார்கள். அது மாறி, ரொம்ப காலம் ஆகிவிட்டது. இந்த முறை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மூலம், பெண் செய்தியாளருக்கு அது நேர்ந்துள்ளது. இது தொடர்ந்துவிடக்கூடாது!

Previous Post

வேட்டையில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை

Next Post

இங்கிலாந்தில் தத்துவஞானி பசவேஸ்வராவின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

Next Post

இங்கிலாந்தில் தத்துவஞானி பசவேஸ்வராவின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures