பிரதமர் மோடி துவக்கி வைத்த ஆயுஷ்மான் பாரத் எனப்படும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள் ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துவக்கம்
ஏழை, எளிய மக்களுக்கு, தரமான மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கும் வகையில், ‘ஆயுஷ்மான் பாரத்’ எனப்படும், தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின்படி, நாடு முழுவதும், 10.71 கோடி குடும்பங்களைச் சேர்ந்த, 50 கோடி பேருக்கு, இலவச மருத்துவ சிகிச்சை வசதி கிடைக்கும். ஏழை, எளிய மக்கள் கடனாளியாவதை தடுக்கும் வகையிலும், ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சையை உறுதி செய்யும் வகையிலும், இந்த திட்டம் அமைந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில், கடந்த 23ம் தேதி இந்த திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்து, 5 பேருக்கு அடையாள அட்டையை வழங்கினார்.
முதல்பயனாளி
இந்த திட்டத்தின் கீழ், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கிழக்கு சிங்பூம் சர்தார் மருத்துவமனையில் 22 வயதான கர்ப்பிணி ஒருவர்முதலாவதாக பயனடைந்துள்ளார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. முதல் நாளில் 4 பேர், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பிரதமர் துவக்கி வைத்த 24 மணி நேரத்திற்குள், ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். சத்தீஸ்கர், அரியானா, ஜார்க்கண்ட், அசாம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பயனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடிதம்
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டத்தில் பயன்பெற போகும் 98 சதவீத பயனாளிகளை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களுக்கு, இந்த திட்டம் குறித்தும், எப்படி பயன்படுத்தி கொள்வது குறித்தும், பிரதமர் அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி வருகிறோம். இதுவரை 40 லட்சம் கடிதம் அனுப்பியுள்ளோம். அந்த கடிதத்தில் ‘கியூஆர்’ கோட்(QR code) மற்றும் பயனாளிகளின் குடும்ப விவரம் இருக்கும். இதனை அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டம் குறித்த விவரங்களை mera.pmjay.gov. in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 14555 என்ற உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

