அஸ்கிரிய பீடத்தினர் எம்மைக் கீழேயும், தாம் மேலேயும் அமர்ந்திருந்து சிங்கள – பௌத்த மனோநிலையுடனேயே எங்களைச் சந்தித்தனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மல்வத்து பீடத்து மகாநாயகர்களுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது. அவர்கள் மனிதாபிமானத்துடன் அணுகினர். அஸ்கிரிய பீடத்தினர் அவ்வாறு இல்லை. அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது, எங்களது மதப் பெரியார்கள் பௌத்த மதத்துக்கு முதலிடம் கொடுக்க சம்மதித்து விட்டதாக என்னிடம் தெரிவித்தார்கள். அதனால் பௌத்த மதத்துக்கு முதலிடம் தரவேண்டும் என்ற மனோநிலையில் அவர்கள் இருந்தார்கள்.
வடக்கில் காணப்படும் பௌத்த சின்னங்கள், சிங்களவர்களுடையது அல்ல என்பதைக் கூறினேன். தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். அஸ்கிரிய பீடத்தினருடன் இது முதல் சந்திப்பு என்பதால், அவர்கள் கோபப்படுவார்கள் என்று உண்மைகளைச் சொல்லவில்லை. சிங்கள மொழி கி.பி. 6ஆம் நூற்றாண்டின் பின்னரே வந்தது. மகாவம்சம்கூட பாளி மொழியில்தான் எழுதப்பட்டது.
அவர்கள் சிங்கள மொழி 2ஆயிரத்து 500 வருடங்களுக்கு முற்பட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். 1947ஆம் ஆண்டு சிங்கள மொழியில், 60 சதவீதம் பாளியும், 40 சதவீதம் தமிழும் இருந்தது. 1960ஆம் ஆண்டுகளில் அதில் ஹிந்தியையும் இணைத்துக் கொண்டார்கள். அவர்கள் சிங்கள – பௌத்த இறுமாப்பில் இருக்கிறார்கள். தொடர்ந்து பேசினால் மாற்றலாம் என்று நினைக்கின்றேன்.
வடக்கு மாகாணசபை நிர்வாக ரீதியாக திறனற்று இருப்பது என்பது எனக்கு எதிரான குற்றச்சாட்டு. எனக்கு எதிராக எந்தக் குற்றங்களும் சுமத்த முடியாது என்பதால் இப்படிக் குற்றம் சுமத்துகின்றனர்.நான் ஆணையிட்டு எதனையும் செய்ததில்லை. அப்படி செயற்பட வேண்டிய அவசியமும் இல்லை. நல்லவிதமாகப் பேசி என்னுடைய வேலைகளை செய்து வந்தேன்.
ஆனால் அதிகாரிகள், நல்ல நிர்வாகி என்றால்,கட்டளையிடும் – ஆணையிடும் ஒரு விதமான ஆக்களை எதிர்பார்க்கின்றனர். நிர்வாகம் எனக்குரிய கடமையல்ல. செயலர்கள், தலைமைச் செயலர் இருக்கின்றார். நிர்வாகத்தில் ஏதாவது சீர்கேடு என்றால் அவர்களிடத்தில்தான் கேட்க வேண்டும்.
அதை என்னிடம் கேட்டக வேண்டிய அவசியமில்லை. நானும் டக்ளஸ் தேவானந்தா போன்று நினைத்ததைச் செய்ய வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். நான் அப்படிப்பட்டவன் அல்ல. சட்டத்துக்கு ஏற்ப எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்வேன் – என்றார்.

