நாடாளுமன்றமானது சட்டரீதியாகவே அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அரசியலமைப்பு நிர்ணய சபை சட்டவிரோதமானது என்றும், அதனால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை ஏற்புடையதல்ல என அறிவிக்குமாறு கோரியும் சட்டவிளக்கங்களுடன் விஜயதாஸ ராஜபக்ஷ எம்.பி., சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே சபாநாயகர் மேற்படி விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. தினப்பணிகளைத் தொடர்ந்து அரசியலமைப்பு சபை விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, “நாடாளுமன்றம் சட்டத்திற்கு முரணான வகையில் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டதாக உரிய காரணங்களை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஷ உங்களிடம் கடிதமொன்றை கையளித்திருந்தார். இதற்கு நீங்கள் பதிலை வழங்கவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,
“நாடாளுமன்றம் சட்டரீதியாகவே அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளதென விஜயதாஸ ராஜபக்ஷவின் கடிதத்துக்கு நான் பதிலளித்துள்ளேன். இந்த விடயம் தொடர்பில் நான் ஊடகங்களுக்கு அறிவிக்காதபோதிலும் அவருக்கு உரிய பதிலை அளித்துள்ளேன்” என்றார்.
இதன்போது குறிக்கிட்ட சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, “விஜயதாஸ ராஜபக்ஷதான் இந்தச் செயற்பாட்டை முன்னின்று செய்திருந்தார்” என்று சுட்டிக்காட்டினார்.

