இன்று இரவாகி விடிந்தால் நாளைக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஏற்கனவே தினகரனின் குக்கர் விசில் சப்தம் அங்கே பலமாக கேட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ’துவண்டுடுவோமோ, தோத்துடுவோமோ?’ என்று நொந்து கிடக்கிறது பன்னீர் அணி.
காரணம், பன்னீரின் டீமை சேர்ந்த மதுசூதனனுக்குதான் அங்கே சீட் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். இந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது அவர்களுக்கு ஈகோ பிரச்னை
இந்நிலையில் மேலும் பன்னீர் டீமின் கனவுகளை, கோஷங்களை அடித்து நொறுக்கும் வண்ணம் ஜெ.,வின் 20 நொடி வீடியோவை வெளியிட்டிருக்கிறார் வெற்றிவேல் எம்.எல்.ஏ. தேசி அளவில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது இந்த வீடியோ.
இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பன்னீர் அணி, வெளியாகி இருக்கும் வீடியோ பற்றி குறை சொல்ல துவங்கிவிட்டது. பன்னீரின் ஆதரவு எம்.பி.யான கே.சி.பழனிசாமி “அம்மாவை மோசமா வீடியோ எடுத்திருக்காங்க. அந்த வீடியோவை பாருங்க, நைட்டியெல்லாம் முழங்காலுக்கு மேலே ஏறிய நிலையில் இருக்கிறது. அவரது வலது தோள்பட்டையில் நைட்டி சற்று கீழிறங்கி தோள்பட்டை வெளிப்படையாய் தெரிகிறது.
அம்மா இப்படியெல்லாம் ஒரு நாளும் தன்னை படமோ, வீடியோவோ எடுக்க அனுமதிக்கவும் மாட்டார் விரும்பவும் மாட்டார்.
ஆக அம்மாவுக்கே தெரியாம, அவரே அறியாமல் இதை எடுத்திருக்காங்க. அம்மாவை அசிங்கப்படுத்தணும் அப்படிங்கிற நோக்கத்திலே செய்யப்பட்டிருக்குது.
நாங்கள் எதிர்பார்த்தது இப்படியான வீடியோ இல்லை. போயஸ் கார்டனில் வைத்து அம்மாவுக்கு என்ன நடந்தது? புரட்சித்தலைவரை தீவிர சிகிச்சையிலிருந்து மீட்டுக் கொண்டு வந்தது போல் ஏன் அம்மாவை மீட்கவில்லை? என்பது உள்ளிட்ட கேள்விகள்தான்.
அம்மாவுக்கே தெரியாமல் மறைவாக, திருட்டுத்தனமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோ மூலம் அம்மாவை அசிங்கப்படுத்தியுள்ளார்கள். “ என்றிருக்கிறார்.
இதற்கு வெற்றில்வேல் என்ன விளக்கம் சொல்லப்போகிறாரோ!?