தமிழ் அரசியல் கைதிகள் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை விடவும் அதிக காலம் சிறைச்சாலைகளில் வாடி வருவதாகவும், அவர்களை விடுதலை செய்வதாக வாக்குறுதி அளித்த தற்போதைய ஜனாதிபதியும் அதனை நிறைவேற்றவில்லை எனவும் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர்கள் தமிழர்கள் என்பதினாலேயே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று வெள்ளிக்கிழமை (16) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
காவி உடை விவகாரமும் பௌத்த பேரினவாத அரசியலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் சிறைத் தண்டனைக்கு உள்ளாகும் பிக்குகளின் காவி உடை விவகாரத்தில், ஞானசார தேரர் கைதைத் தொடர்ந்து எழுந்துள்ள சிக்கலைத் தீர்க்க விசேட ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழு முன்வைத்துள்ள சிறைச்சாலை கைதிகளின் சீருடை தொடர்பான மாற்றத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்தர்களின் ஆதரவைத் தக்க வைக்கலாமே தவிர, பௌத்த தர்மத்தையோ அது கூறும் நீதியையோ பாதுகாக்க முடியாது.
ஞானசார தேரர் நாட்டின் சட்டத்தை மதிக்காது, இனங்களுக்கு இடையில் மோதலைத் தூண்டும் வகையில் செயற்பட்டதை நாடே அறியும்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காகத் தண்டனை பெற்றபோதும், அத்தண்டனை சட்டத்துக்குப் புறம்பாக நீக்கப்பட்டு பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
தற்போது சிறைச்சாலைச் சட்ட விதிகளுக்கு அமைவாக அவர் சாதாரண உடையில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டதைக் காரணம் காட்டி, மகா சங்கத்தினரும் சிங்கள பௌத்தர்களும் கொதித்தெழுவது எந்தப் பௌத்த கருமத்தின் அடிப்படை என்ற கேள்வி எழுகின்றது.
“அதிகாரத்தின் துணைகொண்டு நாட்டின் சட்டத்தை மாற்ற மாட்டேன்” எனக் கூறிய ஜனாதிபதி, தற்போது சிங்கள பௌத்தர்களுக்குப் பயந்து நடைமுறையிலுள்ள சிறைச்சாலைச் சட்ட விதிகளையே மாற்றக் குழு அமைத்துள்ளார். இதன் மூலம் ஜனாதிபதியினதும் நாட்டின் போக்கினதும் உண்மையான நிலையை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இந்து மதகுருக்கள், கிறிஸ்தவ மதத்தலைவர்கள் மற்றும் இஸ்லாமியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறைகளில் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது பௌத்த துறவிகள் அமைதி காத்தனர்.
ஆனந்த சுதாகரனின் நிலை: அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனை விடுவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தும், அவர் இன்றுவரை விடுவிக்கப்படாமல் சிறையிலேயே வாடுகின்றார்.
நிறைவேற்றப்படாத வாக்குறுதி: தமிழ் அரசியல் கைதிகள் தமக்குரிய தண்டனைக் காலத்தையும் தாண்டி சிறையில் உள்ளனர். இவர்களை விடுவிப்பதாக வாக்குறுதியளித்த தற்போதைய ஜனாதிபதியும் அதனை நிறைவேற்றத் தவறியுள்ளார். அவர்கள் தமிழர்கள் என்பதாலேயே இந்த புறக்கணிப்பு நிகழ்கிறது.
பிக்குகளின் காவி உடை விவகாரத்தில் அவசர அவசரமாகக் குழு அமைத்துச் செயற்படும் அரசு, சிங்கள பௌத்த சார்பு அரசியலையே முன்னெடுக்கிறது. இதுவே உண்மையான பயங்கரவாதம் ஆகும்.
ஞானசார தேரரின் தீவிரவாத அரசியலுக்கும் காவி உடை விவகாரத்திற்கும் எதிராக நீதியின் பக்கம் நின்று கருத்துத் தெரிவிக்கும் பௌத்த பிக்குகள் மற்றும் பொதுநிலையினரின் செயற்பாடுகள் பாராட்டத்தக்கவை.
அதேபோன்று, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்திலும் இவர்கள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் தகுந்த அழுத்தம் கொடுக்க வேண்டும். பயங்கரவாதத்திலிருந்து அரசைக் காக்கும் சட்டங்கள் இயற்றப்படுமானால், அது நீதியின் குரலைப் புதைத்துவிடும்.
அரச பயங்கரவாதத்திற்குத் துணைநிற்கும் சிங்கள பௌத்த கருத்து நிலையும், அதனைப் பாதுகாக்கும் அரசியலமைப்பும் முழுமையாக மாற்றப்படும் போதே நாட்டின் அனைத்து மக்களுக்கும் உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என அருட்தந்தை மா. சத்திவேல் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.













