இடிமுழக்கம் மற்றும் கடும் மழையினால் திங்கட்கிழமை மாலை 40 நிமிடங்கள் எஞ்சி இருந்தபோது இடைநிறுத்தப்பட்டு புதன்கிழமை காலை 9.30 மணிக்கு தொடரப்பட்ட சுப்பர் சிக்ஸ் கால்பந்தாட்டப் போட்டியில் சீ ஹோக்ஸ் அணியை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கலம்போ எவ்சி வெற்றிகொண்டது.
கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி 50ஆவது நிமிடத்தைத் தொட்டபோது இடிமுழக்கம் மற்றும் கடும் மழையினால் வீரர்கள், அதிகாரிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மத்தியஸ்தர் சசன்க மதுஷன்கவினால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. அப்போது இரண்டு அணிகளும் தலா 1 கோல் போட்டிருந்தன.
இதே மைதானத்தில் இந்தப் போட்டி புதன்கிழமை (14) காலை தொடரப்பட்டபோது மீண்டும் இரண்டு அணிகளும் மிக அற்புதமாக விறுவிறுப்புடன் விளையாடி பரபரப்பை ஏற்படுத்தின.

இப் போட்டி இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் மத்தியஸ்தராக செயல்பட்ட சசன்க மதுஷன்க ஏஎவ்சி சம்பியன்ஸ் லீக்கில் கடமையாற்ற வெளிநாடு சென்றுள்ளதால் இன்றைய தினம் ஆட்டம் தொடரப்பட்டபோது அவருக்குப் பதிலாக மத்தியஸ்தராக சத்துர மதுரங்க செயல்பட்டார்.

போட்டியின 74ஆவது நிமிடத்தில் கலம்போ எவ்சி வீரர் இப்ராஹிம் லெப்பேக்கு கோல் போடுவதற்கான வாய்ப்பு கிடைத்தபோது சீ ஹோக்ஸ் வீரர் மதுஷான் ராஜகருண அவரது ஜேர்சியை பின்னாலிருந்து இழுத்து வீழ்த்தியதால் மாற்று மத்தியஸ்தர் சத்துர மதுரங்கவின் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.
போட்டியின் 85ஆவது நிமிடத்தில் கலம்போ எவ்சி வீரர் ஈரானைச் சேர்ந்த குரூஷ் மனேஷ் தனது எல்லையிலிருந்து பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட இப்ராஹிம் லெப்பே முன்னோக்கி நகர்த்திச் சென்று கோலினுள் புகுத்தினார்.

இந்த கோலே கலம்போ எவ்சியின் வெற்றி கோலாக அமைந்தது.
கலம்போ எவ்சி அணிக்கும் சீ ஹோக்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி பத்துவருடங்களுக்கு முன்னர் பிரதான கழங்கள் மோதிக்கொண்ட போட்டிகளைப் போன்று மிகுந்த விறுவிறுப்பை தோற்றுவித்தது.

இனி வரும் சுப்பர் சிக்ஸ் போட்டிகள் யாவும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்கள் பெருமளவில் அரங்கிற்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் சுற்றுப் போட்டி 1 – 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.
புளூ ஈக்ள்ஸ் வெற்றி
புளூ ஈக்ள்ஸ் அணிக்கும் ரட்னம் அணிக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை மாலை கடைசி 12 நிமிடங்கள் கும்மிருட்டில் நடைபெற்ற தரமிறக்கல் போட்டியில் புளூ ஈக்ள்ஸ் 4 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

புளூ ஈக்ள்ஸ் சார்பாக ரட்னம் வீரர் மொஹமத் அவ்சால் (40 நி. சொந்த கோல்), டோக்கு பீலிக்ஸ் (75 நி., 80 நி.), கனேசன் சதீஸ் (82 நி.) ஆகியோரும் ரட்னம் சார்பாக ஸ்ரீகுமார் யுகேஷ்ராஜும் (90+3 நி.) கோல்களைப் போட்டனர்.












