வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் காணிகளை தொல்லியல் திணைக்களம் பலவந்தமான முறையில் கையகப்படுத்தவில்லை. அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் உள்ள தொல்லியல் சின்னங்களே அடையாளப்படுத்தப்படுகின்றன என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கடந்த காலங்களில் அரச ஆதரவுடன் தொல்லியல் சின்னங்கள் மற்றும் புராதன சின்னங்கள் அழிக்கப்பட்டன. தொல்லியல் புதையல்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அவ்வாறான நிலைமை தற்போது கிடையாது. மிகுதியாக உள்ள தொல்லியல் சின்னங்களையாவது எதிர்கால தலைமுறையினருக்காவது பாதுகாக்க வேண்டும்.
கடந்த கால முறையற்ற நிர்வாகத்தின் நிழலில் இன்றும் வாழ்பவர்கள் இனவாதம் மற்றும் மதவாத முரண்பாடுகளை ஏற்படுத்த தொல்லியல் சின்னங்களை திட்டமிட்ட வகையில் அழிப்பதற்கு முயற்சிக்கிறார்கள். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. தொல்லியல் சின்னங்கள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம் வழங்கும் வகையில் ஒழுங்குவிதிகள் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்வதால் சிறைச்சாலை நிரம்பி வழிகிறது. இட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள்.
இவர்கள் ஆட்சியில் இருந்தபோது குற்றச்செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து சிறந்த கல்வி முறைமையை அமுல்படுத்தியிருந்தால் பலர் இன்று குற்றவாளிகளாகியிருக்கமாட்டார்கள்.
முள்ளிக்குளம் பகுதிக்கான பாதயாத்திரை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த காட்டுவழிப் பாதை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. காட்டுப் பகுதியில் வீதியமைக்க முடியாது. அவ்வாறான நிலையில் பாதயாத்திரை செல்வதற்கு அனுமதியளிப்பது பற்றி ஆராய வேண்டும். ஏனெனில் அப்பகுதியில் காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.
தற்போது கதிர்காம பாத யாத்திரை ஆரம்பமாகியுள்ளது. அதற்காக குறித்த காட்டுவழிப்பாதை திறக்கப்பட்டு யாத்திரிகர்களுக்கு தேவையான வசதிகள் பிரதேச சபை மற்றும் மாவட்டச் செயலகங்கள் ஊடாக ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களின் காணிகள் தொல்லியல் திணைக்களத்துக்காக கையகப்படுத்தப்படுவதாக வடக்கு மாகாண எம்.பி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் தவறானது. தொல்லியல் திணைக்களத்துக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்படவில்லை.
வனஜீவராசிகள் திணைக்களம், வனவளத்துறை திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றில் உள்ள தொல்லியல் சின்னங்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. இது ஒரு மதத்துக்கோ அல்லது இனத்துக்கோ மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு செயற்பாடல்ல என்றார்.













