மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (20) இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 4 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 13 போட்டிகளில் 13 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 6ஆம் இடத்திலுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ப்ளே ஓவ் சுற்றுக்கு தெரிவாவது இலகுவானதல்ல .
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் கடும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதில் மத்திய வரிசை வீரர் கோபின் பொஷ் அதிகப்பட்சமாக ஆட்டம் இழக்காமல் 32 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவருக்கு அடுத்ததாக திலக் வர்மா 20 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் கெமரன் க்றீன் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சௌராப் டுபே 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கார்த்திக் தியாகி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
148 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை வெற்றி இலக்காகக்கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் கடும் சிரமத்திற்கு மத்தியில் 18.5 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 148 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மனிஸ் பாண்டே (45), ரோவ்மன் பவல் (40) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றி இருந்தனர்.
அணித் தலைவர் அஜின்கியா ரஹானே 21 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் கோபின் பொஷ் 30 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
ஆட்டநாயகன்: மனிஷ் பாண்டே
ப்ளே ஓவ் சுற்றுக்கான கடைசி அணி எது?
ஐந்து அணிகளுக்கு இடையில் போட்டி
இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் ப்ளே ஒவ் சுற்றுக்கு றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (18 புள்ளிகள்), குஜராத் டைட்டன்ஸ் (16), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (16) ஆகிய மூன்று அணிகள் ஏற்கனவே விளையாட தகுதி பெற்றுவிட்டன.
மும்பை இண்டியன்ஸ், லக்னோவ் சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுவது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.
இந் நிலையில் ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்லப்போகும் கடைசி அணி எது என்பதற்கான போட்டி ராஜஸ்தான் றோயல்ஸ் (14), பஞ்சாப் கிங்ஸ் (13), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (13), சென்னை சுப்பர் கிங்ஸ் (12), டெல்ஹி கெப்பிட்டல்ஸ் (12) ஆகிய அணிகளுக்கு இடையில் நிலவுகிறது.
இந்த அணிகளில் கடைசியாக உள்ள இரண்டு அணிகளுக்கு ப்ளே ஓவ் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு மிக அரிதாகவே இருக்கிறது.
இன்று நடைபெறவுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிபெறத் தவறினால் லீக் சுற்றுடன் வெளியேறிவிடும்.


