நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்தின் பேரில் 296 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் விசேட அறிவுறுத்தலின்படி, குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், அனைத்து பொலிஸ் பிரிவுகளும் இணைந்து இந்த விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன.
செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்ற இந்த நடவடிக்கையின் போது, மொத்தம் 22,195 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 7 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும், நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 69 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 43 பேர் நேரடி பிடியாணை உத்தரவுக்குட்பட்டவர்களாக இருந்ததுடன், ஏனைய 26 பேருக்கு திறந்த பிடியாணை உத்தரவு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி, மதுபோதையில் வாகனம் செலுத்திய 104 சாரதிகள் கைது செய்யப்பட்டதுடன், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கு உட்பட்ட 1,451 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவும் இத்தகைய விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

