இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த பாதாள உலகத் தலைவனான ‘அங்கொட லொக்கா’ உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய தூதரகம் ஊடாக இவை, குறித்த விவகாரம் தொடர்பில் தற்போது விசாரணைகளை முன்னெடுக்கும் சி.பி.ஐ. எனப்படும் இந்திய மத்திய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன இதனை கூறினார்.
கொலை, கொள்ளை, கப்பம் கோரல் உள்ளிட்ட பல திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த, பிரபல பாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா என அறியப்படும் மத்துமகே லசந்த சமிந்த பெரேராவின் மரணம் தொடர்பில் 27 வயதான அமானி தான்ஜி , 36 வயதான சட்டத்தரணி சிவகாமி சுந்தரி மற்றும் எஸ்.தியாகேஷ்வரன் ஆகிய மூவர் சந்தேகத்தில் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அங்கொட லொக்கா நஞ்சூட்டி கொலைச் செய்யப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டு விட்டதாக இலங்கை ஊடகங்கள் வெளியிட்ட தகவலை அடுத்து, இலங்கை பொலிஸார் 2002 ஆம் ஆண்டில் 25 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பில் பரஸ்பர தகவல் பறிமாற்றுச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் உதவியை அது குறித்து உறுதி செய்ய கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது ..

