‘‘வரும் 2022ல் நடக்கவுள்ள உலக கோப்பையில் பங்கேற்பது தான் எனது இலக்கு. இதற்காக திட்டமிட்டு தயாராக வேண்டும்,’’ என, ஜுலான் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்தில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு நடக்க இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இத்தொடர் வரும் 2022க்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இந்திய அணியின் சீனியர் வீராங்கனைகளான கேப்டன் மிதாலி ராஜ் 37, வேகப்பந்துவீச்சாளர் ஜுலான் கோஸ்வாமி 37, ஆகியோர் இத்தொடரில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.
இதுகுறித்து ஜுலான் கோஸ்வாமி கூறுகையில், ‘‘வரும் 2022 உலக கோப்பைக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால், சிறப்பான முறையில் தயாராகலாம். ஆனால் இதில் பங்கேற்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இத்தொடரில் விளையாடுவது எனது இலக்கு. இதற்காக, ஒவ்வொரு தொடராக திட்டமிட்டு பங்கேற்க உள்ளேன். தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே அணியில் இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியும். இந்தியாவுக்காக விளையாடுவது மிகப் பெரிய கவுரவம்,’’ என்றார்.

