ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி தொடர்பாக நாம் இன்னொருவரை குறைக்கூற வேண்டியத் தேவைக்கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, நேற்று அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் விசேட கூட்டமொன்று சிறிகொத்தவில் இடம்பெற்றது.
இதன்நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வி தொடர்பாக நாம் இன்னொருவரை குறைக்கூற வேண்டியத் தேவைக்கிடையாது.
அரசாங்கத்துக்கு இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைத்துள்ளது. இது சரியா – தவறா என எம்மால் கூறமுடியாது.
ஆனால், இதற்கு காரணம் சஜித் பிரேமதாஸ தான். பொதுத் தேர்தலில் அவர் இல்லாமல் போயுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியையும் இல்லாது செய்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலின்போது நாம் அவருக்கான முழுமையான ஆதரவினை வழங்கினோம். இதனை இல்லை என்றுக் கூற முடியாது.
எனினும், அந்தத் தேர்தலில் வெற்றி பெற முடியாது போனது. இதன் ஊடாக எமது வாக்குவீதம் குறைவடைந்துள்ளது.
இந்தத் தோல்வியை அடுத்து கட்சியின் தலைமையில் மாற்றம் வேண்டும் என கூறினாலும், இப்போது அதுதொடர்பாக நாம் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை“ எனத் தெரிவித்துள்ளார்.

