7 தமிழர்கள் விடுதலையில் ஜெயலலிதா கூறும் வார்த்தை உண்மையா?
7 தமிழர்களையும் விடுதலை செய்யவே தமது அரசு விரும்புகிறது என்று ஜெயலலிதா கூறியது உண்மையான வார்த்தைகள் என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு வரும் 11ம் தேதியுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவருடன் சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட மற்ற அறுவரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.
அவர்களின் விடுதலை தொடுவானம் போன்று நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால், அவர்களின் விடுதலைக்காக தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் நாடகம் ஆடுகிறது. ராஜீவ் கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களுக்கும் தொடக்கத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களின் தண்டனை வெவ்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. வழக்கமாக ஆயுள் தண்டனை என்பது 14 ஆண்டுகள் மட்டுமே. ஆயுள் தண்டனை பெற்றவர்கள் நன்னடத்தை என்ற பெயரில் 10 ஆண்டுகளிலும், சில நேரங்களில் 7 ஆண்டுகளிலும் விடுதலை பெறுவது வழக்கமாக உள்ளது.
ஆனால், 7 தமிழரும் 25 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய – மாநில அரசுகளின் அரசியல் சித்து விளையாட்டுக்கள் காரணமாக அவர்களின் விடுதலைக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போடப்படுகிறது.
அரசியல் ரீதியாக லாபம் தேவைப்படும் நேரங்களில் இவர்களின் விடுதலை குறித்து பேசுவதையும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழக அரசு, அதன்பின்னர் இச்சிக்கலைக் கிடப்பில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 7 தமிழர்களை விடுதலை செய்வதாக அறிவித்த ஜெயலலிதா அரசு, அதற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவுடன் பின்வாங்கிவிட்டது. இச்சிக்கல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு வலிமையான வாதங்களை முன்வைக்காமல் 7 தமிழர்களின் விடுதலைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
அதன்பின் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பாக 7 தமிழர்கள் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் எழுதி இந்த விஷயத்தில் தமக்கு அக்கறை இருப்பதைப் போல காட்டிக்கொண்டார். ஆனால், இந்த விஷயத்தில் மத்திய அரசு எதிர்மறையான பதில் அளிக்கப்பட்டு விட்ட போதிலும் ஜெயலலிதா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்துக் கொண்டிருக்கிறது.
மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் 7 தமிழர்கள் விடுதலைக்கு ஒப்புக்கொள்ளப் போவதில்லை. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி ஆன நிலையில், அடுத்து வந்த தேசிய ஜனநாயக கூட்டணி மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தண்டனை குறைப்புக்கு எதிராக கடுமையான சட்டப்போராட்டம் நடத்தியதே இதற்கு சாட்சி.
பிற தேசியக் கட்சிகளும் இதேநிலையில் தான் உள்ளன. இத்தகைய சூழலில் 7 தமிழர்களின் விடுதலைக்கு ஒரே வழி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161ஆவது பிரிவை பயன்படுத்துவது தான். இதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், மத்திய அரசிடம் முறையிடுவது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது ஆகும்.
முதலமைச்சர் ஜெயலலிதா நினைத்தால் அமைச்சரவைக் கூட்டத்தை இந்த நிமிடமே கூட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யும்படி ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வாறு பரிந்துரைத்தால், 7 தமிழர்களும் அடுத்த 24 மணி நேரத்தில் விடுதலையாகி சுதந்திரக் காற்றை சுவாசிக்க வாய்ப்பிருக்கிறது.
ஆனால், அரசியலமைப்புச் சட்டப்பிரிவை பயன்படுத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், தமிழக அரசியல் கட்சிகளின் கருத்துகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில், 7 தமிழர்களையும் விடுதலை செய்யவே தமது அரசு விரும்புகிறது என்று ஜெயலலிதா கூறியது உண்மையான வார்த்தைகள் என்றால், உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161வது பிரிவின்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்யுமாறு மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் ஜூன் 11ம் தேதி வேலூர் சிறையிலிருந்து கோட்டை நோக்கி நடத்தப்படும் பேரணியில் மனிதநேயமுள்ள அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.