யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் முன்னாள் போராளிகளும் இடம்பெற்றுள்ளனர்.
புனர்வாழ்வளிப்பு ஆணையாளரின் பணிப்புரைக்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சியின் மேற்பார்வையில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் கடந்த வியாழக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த முன்னாள் போராளிகளுக்கு மாதாந்தம் 40,000 ரூபாய் சம்பளமும் மருத்துவ வசதிகளும் 55 வயதின் பின்பு ஓய்வூதியமும் வழங்கப்படவுள்ளன.
இவர்கள் யாழ் பலாலியிலுள்ள இராணுவ பண்ணைகளில் தென்னை மரங்களை பராமரிப்பதற்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். புதிதாக நியமனம் பெற்ற இளைஞர் யுவதிகள் 8 மணித்தியாலயம் ஒரு நாளிற்கு சேவையில் ஈடுபட வேண்டும் எனும் நிபந்தனைகளுக்கமைய இவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது சொந்த எதிர்காலத்தை கவனித்துக் கொள்வதன் மூலம் ஒரு குடும்பத்தாரை போலவே ஒரு நாட்டில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் இருவரை தனிப்பட கேட்ட போது, பொருளாதார நிலையே தான் இராணுவத்தில் இணைய ஒரே காரணம், போராளியாக இருந்த போது தலைவர் எங்களை பார்த்து கொண்டார், இப்போது எங்களை பார்க்க யாருமில்லை என்று கண்ணீருடன் அந்த போராளி கூறுகின்றார்.
இன்னும் தான் வறுமையால் திருமணம் செய்து கொள்ளவில்லை, வீட்டில் வயோதிப தாய் மற்றும் சகோதரி ஆகியோர் உள்ளார்கள் அவர்களை பார்க்க வேண்டியுள்ளது எனக்கு வேறு வழி தெரியவில்லை ஆதலால் இணைந்தேன் என்று கூறியுள்ளார் அந்த முன்னாள் போராளிப்பெண்.












