27 நாடுகள் கொண்ட அமைப்பாக தொடர்ந்து இயங்குவோம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் பேட்டி
ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இருந்து விலக பிரிட்டன் மக்கள் முடிவெடுத்துள்ள நிலையில் 27 நாடுகளை கொண்ட அமைப்பாக தொடர்ந்து இயங்குவோம் என ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க் பேட்டியளித்துள்ளார்.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் தங்கள் சமூக, பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு ‘ஐரோப்பிய யூனியன்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கின. 1993-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய யூனியனில் பிரான்சு, ஜெர்மனி, பெல்ஜியம், பிரிட்டன், இத்தாலி, டென்மார்க், போர்ச்சுக்கல் உள்ளிட்ட 28 நாடுகள் இடம்பெற்று உள்ளன.
இதில் உள்ள நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை பிற உறுப்பு நாடுகளுக்கு திறந்து வைத்துள்ளன. இந்த அமைப்பின் கடைசி உறுப்பு நாடாக 1-7-2013 அன்று குரோசியா சேர்க்கப்பட்டது.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் வசிப்பவர்கள் அந்த அமைப்பில் உள்ள எந்தவொரு நாட்டுக்கும் சென்று வாழலாம்; வேலைவாய்ப்புகளை பெறலாம்; கல்வி கற்கலாம்; தொழில் தொடங்கலாம். இதன் காரணமாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரிட்டனில் அதிக அளவில் குடியேற தொடங்கினார்கள்.
இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, குறிப்பாக வேலைவாய்ப்பு பறிபோவதாக பிரிட்டன் மக்கள் கருத தொடங்கினார்கள். பிரிட்டன் அரசாங்கம் வழங்கும் சமூக நலத்திட்டங்களின் பலன்களை பிறநாட்டினர் பெற்று விடுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே அதில் இருந்து விலக வேண்டும் என்றும் அந்த நாட்டில் கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கை நாளுக்கு நாள் வலுவடைந்து வந்தது.
ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா? என்பதை அறிய மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பிரிட்டன் முழுவதும் எழுந்தது. பிரதமர் டேவிட் கேமரூனின் கன்சர்வேட்டிவ் கட்சி தரப்பிலும் பொதுவாக்கெடுப்பு நடத்த நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மேலும் இந்த பிரச்சனை தொடர்பாக டெலிவிஷன்களின் விவாதங்களும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, பொதுவாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் அரசு முடிவு செய்தது.
ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிப்பதா? அல்லது விலகுவதா? என்பது பற்றி தீர்மானிக்க பிரிட்டனில் நேற்று (வியாழக்கிழமை) பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் நாட்டின் குடியுரிமை பெற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த பொதுவாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
இன்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என ஒரு கோடியே 61 லட்சத்து 41 ஆயிரத்து 241 (51.9 சதவீதம்) பேரும், விலக வேண்டும் என 51.5 ஒரு கோடியே 74 லட்சத்து 10 ஆயிரத்து 742 (48.1 சதவீதம்) பேரும் விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 12 லட்சத்து 69 ஆயிரத்து 501 வாக்கு வித்தியாசத்தில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகி விட்டது.
இந்நிலையில், பெல்ஜியம் நாட்டின் தலைநகரான புருசெல்ஸ் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனால்ட் டஸ்க், ‘27 நாடுகளை கொண்ட கூட்டமைப்பாக தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் செயல்படும் என உறுப்பு நாடுகளின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.
இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்தான் என்றாலும் அச்சப்படும்படியாக ஏதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னும் ஒருவாரத்தில் இந்த அமைப்பில் இணைந்துள்ள 27 நாடுகளின் தலைவர்கள் பங்குபெறும் உச்சிமாநாடு நடைபெறவுள்ளது.
அப்போது, இவ்விவகாரம் தொடர்பாக ஆலோசித்து, எங்கள் ஒன்றியத்தின் ஆக்கப்பூர்வமான பணிகளின்மீது அதிக கவனம் செலுத்துவோம் என்றும் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார்.