தமது பூர்வீக வாழ்விடங்களையும் விவசாய நிலங்களையும் மீட்டுத் தருமாறு கோரி பலாலி மக்கள் முன்னெடுத்து வரும் காணி விடுவிப்புப் போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) 24 ஆவது வாரமாகவும் தொடர்கின்றது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முன்னெடுத்துவரப்படும் இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக இன்றும் பலாலிச் சந்தியில் ஒன்றுகூடிய மக்கள், தமது நீண்டகாலக் கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி உணர்வுபூர்வமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக, தலைமுறை தலைமுறையாகத் தமது குடும்பங்களுடன் வாழ்ந்து, விவசாயம் செய்து, வாழ்வாதாரத்தைப் பேணி வந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், 36 ஆண்டுகள் கடந்த நிலையிலாவது மீண்டும் தமது சொந்த நிலங்களில் வாழ்வதற்கான உரிமைக்காகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதன்போது, காணி என்பது வெறுமனே நிலத்தின் ஒரு பகுதியல்ல. அது ஒரு குடும்பத்தின் வரலாறு, வாழ்வாதாரம், நினைவுகள், பண்பாடு மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் உரிமையோடு பின்னிப் பிணைந்தது.
அந்த வகையில், பலாலி மக்களாகிய எமது மக்களின் காணி மீட்புக் கோரிக்கையும் வெறுமனே நிலத்தை மீளப் பெறுவதற்கான கோரிக்கையாக மட்டும் பார்க்காது, தமது வாழ்விடத்தையும் இழந்த வாழ்க்கையையும் மீளக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை உரிமைப் போராட்டமாக பார்க்கப்பட வேண்டும் என்றும் போராடும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறிப்பாக 36 ஆண்டு காலங்கள் கடந்தும் தமது சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாத நிலை தொடர்வதால், மக்களின் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் வாழ்க்கைச் சுகைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
அத்துடன் தமது பூர்வீகக் காணிகளில் மீண்டும் குடியேறி விவசாயம் உள்ளிட்ட தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது என சுட்டிக்காட்டும் குறித்த போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்,
24 வாரங்களாகத் தொடரும் இந்தப் போராட்டம், பலாலி மக்களின் காணி மீதான உரிமைக் கோரிக்கைக்கு இன்னும் தீர் கிடைக்கவில்லை என்றும், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டத்தை தாம் கைவிடத் தயாராக இல்லை என்றும் வலிசுமந்த குரலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











