ஜப்பானில் நடைபெற்றுவரும் அய்ச்சி – நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தது.
இந்த வருட ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை வென்றெடுத்த முதலாவது பதக்கம் இதுவாகும்.
இந்தியா தங்கப் பதக்கத்தை இரண்டாவது தடவையாக தனதாக்கிக்கொண்டது. இதன் மூலம் இந்த வருட ஆசிய விளையாட்டு விழாவில் இந்தியாவுக்கான முதலாவது தங்கப் பதக்கம் கிரிக்கெட் மூலம் கிடைத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக நிஷின், கொரோஜி ஸ்போர்ட்ஸ் பார்க் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தங்கப் பதக்கத்துக்கான மகளிர் ரி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிடம் 147 ஓட்டங்களால் இலங்கை படுதோல்வி அடைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 216 ஓட்டங்களைக் குவித்தது.

இதில் ஸ்ம்ரித்தி மந்தனா 79 ஓட்டங்களையும் ரிச்சா கோஷ் ஆட்டம் இழக்காமல் 49 ஓட்டங்களையும் ஷபாலி வர்மா 48 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 15.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 69 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

சமரி அத்தபத்து (29), கௌஷினி நுதியங்கனா (10), கவிஷா டில்ஹாரி (11) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் தீப்தி ஷர்மா 6 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷபாலி வர்மா 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்ரீயங்கா பட்டில் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்ரீ சரணி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.













