‘செல்சீ பயிற்சியாளர் கான்டே எப்போது வெளியேற்றப்படுவார்?’, ‘அந்த இடத்துக்கு ரோமன் ஆப்ரமோவிச் யாரை நியமிப்பார்?’, ‘அர்சென் வெங்கர் அடுத்து என்ன செய்வார்?’, ‘உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஸ்பெயின் யாரைக் களமிறக்கும்?’, ‘மெஸ்ஸி, ரொனால்டோ தங்கள் கடைசி உலகக் கோப்பையில் கோப்பை வெல்வார்களா?’, ‘ஜெர்மனி உலகக் கோப்பையை தக்கவைத்துக்கொள்ளுமா?’ இப்படிப் பலவாறாக கால்பந்து ரசிகர்கள் கடந்த ஒரு வாரமாக கேள்விகளுக்குள்ளேயே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
உலகக் கோப்பை, பிரீமியர் லீக், மேனேஜர் மாற்றங்கள், பிளேயர் டிரான்ஸ்ஃபர் என வழக்கத்தைவிட கொஞ்சம் பிசியாகவே இருந்தது கால்பந்து உலகம். இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் சிலபஸிலேயே இல்லாத ஒரு குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டார் ஜிடேன். ஹாட்ரிக் சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற ஐந்தே நாள்களில் ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 26 ஆண்டுகளில் யாரும் செய்திடாத சாதனையைச் செய்துவிட்டு, யாருமே எதிர்பாராமல் அவர் கொடுத்திருக்கும் இந்த ட்விஸ்டில் ரியல் மாட்ரிட் மட்டுமல்ல மொத்த கால்பந்து உலகமுமே ஆடித்தான் போயிருக்கிறது.