அநுராதபுரம் எட்டு விகாரைகளின் தலைமை பிக்குவான பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வன்புணர்வு மற்றும் சிறுமி துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில், இலங்கை பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசாங்கமும் காட்டிய பாரபட்சமான மற்றும் முறையற்ற செயற்பாடுகளை தினன தகுண கூட்டிணைவு வன்மையாக கண்டித்துள்ளது.
அக் கூட்டிணைவின் நிறைவேற்று சபையினால் நேற்று சனிக்கிழமை (23) வெளியிடப்பட்ட கண்டன அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அநுராதபுர நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், இந்நாட்டில் சட்டம் அமுல்படுத்தப்படுவதில் நிலவும் அருவருக்கத்தக்க இரட்டைத் தரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன.
சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள், அரசியல் ரீதியாக அதிகாரம் கொண்டவர்கள் மற்றும் மதத் தலைவர்களைப் பாதுகாப்பதற்காக நாட்டின் சட்டம் திட்டமிட்டு வளைக்கப்படுவதையும், நிர்க்கதியான நிலையில் உள்ள பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகள் அலட்சியப்படுத்தப்படுவதையும் இது உறுதிப்படுத்துகிறது.
பாரதூரமான குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேகநபர் ஒருவருக்கு பொலிஸார் வழங்கிய விசேட பிரபுத்துவ உபசரிப்புகளை எமது கூட்டிணைவு கண்டிக்கிறது.
சாதாரண சந்தேகநபர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் போது கடுமையான தடுப்பு விதிகளுக்கு உட்படுத்தப்படும் நிலையில், இந்த சந்தேகநபர் இரண்டு பொலிஸ் ஜீப் வாகனங்களின் பாதுகாப்புடன் ஆடம்பர வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து வீதியை மறித்து பொலிஸார் பாதுகாப்பு வழங்கியமை, பொலிஸார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டாமல் ஒரு குறிப்பிட்ட நபரின் தனிப்பட்ட பாதுகாவலர்களாகச் செயற்பட்டமையையே காட்டுகிறது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதியே பொலிஸாரிடம் தெளிவான வாக்குமூலத்தை வழங்கியிருந்தும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அதனைத் தெரியப்படுத்தாமல் பொலிஸார் சுமார் இரண்டு வாரங்கள் மௌனம் காத்தமை, விசாரணைகளை மூடிமறைப்பதற்கான ஒரு திட்டமிட்ட முயற்சியாகும்.
சந்தேகநபர் தேரருக்கும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் இடையிலான நெருங்கிய உறவுமுறை மற்றும் இதன் காரணமாக விசாரணையின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளது.
சந்தேகநபர் விளக்கமறியலைத் தவிர்த்து தனியார் வைத்தியசாலையில் தங்கியிருக்க அனுமதித்தமை மற்றும் பிணை வழங்கும்போது பொலிஸார் கடுமையாக எதிர்ப்புத் தெரிவிக்காதமை ஆகியவற்றின் பின்னணியில் இந்த உறவினர் முறையிலான தலையீடு இருந்துள்ளது.
பொலிஸாரும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்து, சட்டமா அதிபர் திணைக்களம் ஆஜராகாமையினால், சந்தேகநபர் சார்பில் ஆஜரான சுமார் 36 சட்டத்தரணிகள் கொண்ட குழுவுக்கு முன்னால் அந்தச் சிறுமி நிர்க்கதியாக்கப்பட்டார்.
இலங்கை அரசியலமைப்பின்படி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உறுதிப்படுத்தப்பட்டிருந்தாலும், காவியுடைக்குள்ள அதிகாரத்துக்கும் உயர் அரச பதவிகளுக்கும் முன்னுரிமை வழங்கியதன் மூலம் பொலிஸ் திணைக்களம் பாதிக்கப்பட்டவரின் அடிப்படை உரிமைகளை மோசமாக மீறியுள்ளது.
விசாரணையில் தலையிட்ட உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் கம்பஹா, நிட்டம்புவ பொலிஸ் நிலையங்களின் மகளிர் பணியகங்களின் செயற்பாடுகள் குறித்து உடனடி சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.
சந்தேகநபர் கொண்டுள்ள சமூக, பொருளாதார மற்றும் மத செல்வாக்குகளுக்கு மத்தியில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது தாய்க்கும் உச்சகட்ட சாட்சிகள் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இந்நாட்டில் நிலவும் சட்டத்தின் ஆட்சி ஒரு பிரகசனமாக மாற இடமளிக்க முடியாது. உண்மையான பௌத்த மக்கள் நீதியைப் பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டுக்கு ஆதரவளிக்க வேண்டும்., பௌத்தத்தின் போர்வையில் குற்றங்களைச் செய்தவர்களுக்கு எதிராக நீதி நிலைநாட்டப்படுவதைத் தடுப்பதற்கு மதத்தைப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதிகளுக்கு இடமளிக்க வேண்டாம் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

