சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல் சாம்பியன் கோப்பையைக் கையில் ஏந்துவதற்கு 20 மணி நேரத்துக்கு முன்பாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையைக் கைப்பற்றியவர் செர்ஜியோ ரமோஸ். 2018 ஐபிஎல்-ன் சாம்பியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் 2018 சாம்பியன்ஸ் லீகின் சாம்பியன் ரியல் மாட்ரிட். சூப்பர் கிங்ஸின் கேப்டன் தோனியைப்போல, ரியல் மாட்ரிட்டின் கேப்டன் செர்ஜியோ ரமோஸ். ரியல் மாட்ரிட் மட்டுமல்ல ஸ்பெயின் அணியின் கேப்டனும் ரமோஸ்தான்.
ஐபிஎல் கோப்பையை வென்றதும் தன் மகள் ஸிவாவுடன் தோனி ஸ்டேடியத்தில் விளையாடியதைப் பார்த்தோம். அதற்கு முன்பாகவே தன் மூன்று மகன்களுடன் சாம்பியன்ஸ் லீக் வெற்றியை உக்ரேன் ஸ்டேடியத்தில் கொண்டாடியவர் செர்ஜியோ ரமோஸ்.
மூன்று ஆண்டு … மூன்று கோப்பை!
32 வயதான செர்ஜியோ ரமோஸ் ஸ்பெயினில் பிறந்தவர். 16 வயதிலேயே கால்பந்துவீரராகப் புகழ்பெற ஆரம்பித்தவர். 2005 முதல் அதாவது தன் 19 வயது முதல் ஸ்பெயின் அணிக்காகவும், ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடிவருகிறார். அடிப்படையில் இவர் ஒரு டிஃபெண்டர். எதிர் அணியினர் கோல் அடிக்காமல் தடுக்கும் அரண். இவரைத்தாண்டி பந்துபோனால் எதிர் அணியினரின் காலைப் பதம்பார்க்கவும் தவறமாட்டார். ஆக்ரோஷமான ஆட்டக்காரர். எதிர் அணி வீரர்களை இடிப்பது, முட்டுவது, கீழே தள்ளுவது என மிகவும் அக்ரசிவ் ஆட்டம் ஆடுவார் ரமோஸ். இதனாலேயே அதிக ரெட் கார்டுகளை வாங்கி வெளியே போனவர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர்.
2015 முதல் ரியல் மாட்ரிட் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் செர்ஜியோ. இவர் தலைமையில் 2016, 2017, 2018 என ஹாட்ரிக் சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்றிருக்கிறது ரியல் மாட்ரிட். இந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் 3-1 என லிவர்பூல் அணியைத் தோற்கடித்துக் கோப்பையை வென்றாலும், செர்ஜியோ ரமோஸ் மேல் மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
போட்டியின்போது லிவர்பூலின் முன்னணி வீரர் முகமது சாலாவின் கையைப்பிடித்து இழுத்து அவரைக் கீழே தள்ளி காயமடையவைத்தார் ரமோஸ். `மேட்ரிட் வென்றாலும் ரமோஸைப் புகழ்வது மிகப்பெரிய அசிங்கம்’ என சோஷியல் மீடியாக்களில் ரமோஸை எதிர்த்துப் பெரிய போராட்டமே நடந்துகொண்டிருக்கிறது. ரமோஸ் இன்றல்ல… எப்போதுமே இப்படித்தான்.