சுவாதி கொலைக் குற்றவாளியை நெருங்கியது எப்படி?- காவல்துறை விளக்கம்

சுவாதி கொலைக் குற்றவாளியை நெருங்கியது எப்படி?- காவல்துறை விளக்கம்

 swathi_new_11_2917506f
சுவாதி கொலை வழக்கில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ராம்குமார் (24) என்ற இளைஞரைக் கைது செய்துள்ளது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சென்னை காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன் தெரிவித்தார்.

தனிப்படை போலீஸார் குற்றவாளியை எப்படி நெருங்கினர். எந்த மாதிரியாக விசாரணை மேற்கொண்டனர் என்பது குறித்து விரிவான அறிக்கையை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அந்த பத்திரிகை குறிப்பில், “சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகள் சுவாதி (24) அடையாளம் தெரியாத நபரால் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, நுங்கம்பாக்கம் ஆபீஸில் பணிபுரியும் கமர்ஷியல் மேற்பார்வையாளர் ரகுபதி(55) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நுங்கம்பாக்கம் உதவி ஆணையாளர் கே.வி.எஸ்.தேவராஜ் இந்த வழக்கில் முதன்மை புலன் விசாரணை அதிகாரியாக செயல்பட்டார். தனிப்படையினர் சென்னை பெருநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் மேன்சன்களில் விசாரணை மேற்கொண்டனர். புலன் விசாரணைக்கு சென்னை பெருநகர காவல் துறையின் சைபர் குற்றப் பிரிவு மற்றும் மாநில குற்றப் புலனாய்வுத்துறையின் சைபர் குற்றப் பிரிவினரும் பயன்படுத்தப்பட்டனர்.

தனிப்படையினர் சூளைமேடு பகுதியில் வீடுவீடாக சென்று கண்காணிப்பு கேமரா பதிவில் இருந்த புகைப்பட்டத்தைக் காட்டி விசாரணை செய்தனர். விடுதியில் பராமரிக்கப்படும் பதிவேட்டில் உள்ள புகைப்படமும் கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படமும் ஒத்துப்போனது. மேலும் விசாரணை செய்தபோது அந்த நபரின் பெயர். ராம்குமார் என்பதும், அவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள டி.மீனாட்சிபுரம் என்பதும் தெரியவந்தது. அந்த நபர் அச்சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவானதும் தெரியவந்தது.

1.07.2016 அன்று இரவு திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரை தனிப்படையினர் தொடர்பு கொண்டு ராம்குமாரின் இருப்பிட முகவரியை விசாரிக்க ஒரு தனிப்படையை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. காவல்துறையினர் ராம்குமாரின் வீட்டை சுற்றி வளைத்தனர். காவல்துறையினரைக் கண்ட ராம்குமார் தன்னிடம் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கழுத்தில் காயம் ஏற்படுத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது, ராம்குமாரை சென்னை பெருநகர காவல்துறையினர் காவலில் வைத்து புலன் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் ராம்குமார் (24) த/பெ பரமசிவம் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு நெல்லை ஜஸ்டின் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டப்படிப்பு முடித்துள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்துள்ளார். சென்னையில் அவர் சூளைமேடு சவுராஷ்டிரா நகரில் உள்ள ஏ.எஸ்.மேன்சனில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

சுவாதியின் வீடும் சூளைமேடு பகுதியில் உள்ளது. சுவாதி தினசரி பணிக்குச் செல்ல நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து மின்சார ரயிலில் சென்று வந்துள்ளார். இதனையறிந்த ராம்குமார் அடிக்கடி அவரை பின் தொடர்ந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக கடந்த 24-ம் தேதி அன்று நுங்கம்பாக்க ரயில் நிலையத்தில் ரயிலுக்கு காத்திருந்த சுவாதியைத் தாக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரிய வருகிறது.

புலன் விசாரணையில் தனிப்படையினர் ராம்குமார் சுவாதியை பின் தொடர்ந்ததற்கான ஆதாரங்களையும் மற்றும் தடயங்களையும் கைப்பற்றியுள்ளனர்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News