அநுராதபுரம் ருவான்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமிப் பகுதிகளுக்கு அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அநுராதபுரம் பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அநுராதபுரம் புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ருவான்வெலிசாய வளாகத்திற்கு அருகிலுள்ள தானசாலைப் பகுதியில் கடந்த 7ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம், தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் தொடர்ந்து அப்பகுதியில் தங்கியிருப்பதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
போராட்டம் காரணமாகப் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், தற்காலிகக் கூடாரங்களை அமைக்கும் முயற்சிகள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, பிக்குகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், போராட்டம் ருவான்வெலிசாய வளாகத்திற்குள் அல்லாமல் தானசாலைப் பகுதியில் இடம்பெறுவதாகவும், இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் பரிசீலித்த அநுராதபுரம் பிரதம நீதிவான், பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட ஐந்து பௌத்த பிக்குகளையும் நவம்பர் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.
இதற்கிடையில், அநுராதபுரம் ருவான்வெலிசாய மற்றும் ஜய ஸ்ரீ மகா போதி உள்ளிட்ட புனித பூமிப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுக்கு பலங்கொட கஸ்ஸப தேரர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
பண்டைய காலத்தில் தேவனம்பியதிஸ்ஸ மன்னனால் பௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் பூஜித்து வழங்கப்பட்ட புனித பூமியிலிருந்து தங்களை வெளியேறுமாறு நீதிமன்றம் எவ்வாறு உத்தரவிட முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
புனித பூமியின் வரலாறு மற்றும் மத முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, போராட்டம் இடம்பெற்ற பகுதியில் தற்காலிகக் கூடாரங்களை அமைக்கும் முயற்சியைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
அநுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பான எதிர்ப்புப் போராட்டமும், அதற்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளும் தற்போது நாட்டில் அரசியல், மத மற்றும் சட்ட ரீதியான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.













