ஜப்பானில் நடைபெற்றுவரும் 20ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கைக்கு குறைந்தது ஒரு தங்கம் உட்பட 6 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சில வாரங்களுக்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்திருந்தார்.
ஆனால், அய்ச்சி – நகோயா 2026 ஆசிய விளையாட்டு விழாவில் இதுவரை இலங்கையின் பெறுபேறுகளை நோக்கும்போது அமைச்சரின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது.
ஆசிய விளையாட்டு விழாவுக்கு அதிசிறந்த வீரர்களைத் தேர்வாளர்கள் தெரிவுசெய்துள்ளதாகவும் அதில் தனக்கு தலையிட முடியாது எனவும் அமைச்சர் கூறியிருந்தார்.
ஆனால், ஒரு சில விளையாட்டுக்களின் முன்னோடி சுற்றுகளில் இலங்கை வீர, வீராங்கனைகள் வெற்றிபெற்ற போதிலும் இரண்டாம் சுற்றுக்கு அப்பால் முன்னேற முடியாமல் வெளியேறியது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக விளையாட்டுத்துறை விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
பதக்கங்கள் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மெய்வல்லுநர், குத்துச்சண்டை, பளுதூக்கல் ஆகிய விளையாட்டுக்கள் உட்பட மற்றும் சில போட்டிகளில் இன்றைய தினம் இலங்கைக்கு தோல்விகளே மிஞ்சியது.
மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கு ஏமாற்றம்
நகோயா சிட்டா மிஸுஹோ பார்க் மெய்வல்லுநர் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற பெண்களுக்கான முப்பாய்ச்சல் இறுதிப் போட்டியில் பங்குபற்றிய மதுஷானி ஹேரத்தினால் 8ஆம் இடத்தையே பெற முடிந்தது.
அவர் அப் போட்டியில் 13.20 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்தார்.
அப் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை ஷரிஃபா டெவ்ரோநோவா (14.35 மீற்றர்) தங்கப் பதக்கத்தையும் சீன வீராங்கனைகளான யிங்யிங் ஹுவாங் (14.12 மீற்றர்), யி லி (13.83 மீற்றர்) ஆகிய இருவரும் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.
தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஆஷா இளங்கோ 13.83 மீற்றரைப் பதிவு செய்தபோதிலும் அவரது இரண்டாவது முயற்சி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவர் நான்காம் இடத்தைப் பெற நேரிட்டது.
4 x 400 மீற்றர் கலப்பு தொடர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது தகுதிகாண் சுற்றில் பங்குபற்றிய 6 அணிகளில் இலங்கை 5ஆவது இடத்தைப் பெற்று போட்டியிலிருந்து வெளியேறியது.
அப் போட்டியை 3 நிமிடங்கள் 19.81 செக்கன்களில் நிறைசெய்த இலங்கை அணி இரண்டு தகுதிகாண்களிலும் பங்குபற்றிய 11 அணிகளில் 9ஆவது இடத்தைப் பெற்றது.
இலங்கையின் 4 x 400 மீற்றர் கலப்பு தொடர் ஓட்ட அணியில் ஒமெல் சச்சின்த சில்வா, சயுரி மெண்டிஸ், சதேவ் ராஜகருண, ஜித்மா விஜேதுங்க ஆகியோர் இடம்பெற்றனர்.
குத்துச்சண்டை போட்டிகளில் இலங்கைக்கு தோல்வி
நிஷியோ ஜிம்னாசியம் மண்டபத்தில் நடைபெற்ற பெண்களுக்கான 16 பேர் சுற்றில் 51 கிலோ கிராம் எடைப் பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் பங்குபற்றிய நதீக்கா புஷ்பகுமாரி 0 – 5 என்ற அடிப்படையில் சீன வீராங்கனை யூ வூ என்பவரிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
ஆண்களுக்கான 70 கிலோ கிராம் எடைப் பிரிவில் கிர்கிஸ்தான் வீரர் இக்தியார் நிஷ்ஹோநோவ் என்பவரை எதிர்த்தாடிய இலங்கை வீரர் லஹிரு லக்மால் 2ஆம் சுற்றில் நிலைகுலைந்ததால் மூன்றாம் சுற்று ஆரம்பமாவதற்கு முன்னர் கள மத்தியஸ்தரால் போட்டி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
எடைகளைத் தூக்க முடியாமல் வெளியேறிய இலங்கையர்கள்
நகோயா சிட்டி ட்ரேட் மற்றும் இண்டஸ்ட்ரி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற பி குழுவுக்கான பளுதூக்கல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் எடைகளைத் தூக்க முடியாமல் வெளியேறினர்.
ஆண்களுக்கான 60 கிலோ கிராம் எடைப் பிரிவில் பங்குபற்றிய சுப்புன் டில்ஹார சோமதிலக்க, ஸ்னெச் முறையில் 106 கிலோ கிராம் எடையைத் தூக்கினார். ஆனால் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் அவரால் 135 கிலோ கிராம் எடையை மூன்று தடவைகளும் தூக்க முடியாமல் போனது.
ஆண்களுக்கான 65 கிலோ கிராம் எடைப்பிரிவில் பங்குபற்றிய சந்து டத்சன் ஜயவர்தன, ஸ்னெச் முறையில் 120 கிலோ கிராம் எடையை மூன்று தடவைகளும் தூக்க முடியாமல் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.
கபடியில் தொடரும் ஏமாற்றம்
டோக்காய் சிட்டிஸன் ஜிம்னாசியம் அரங்கில் நடைபெற்ற பெண்களுக்கான பி குழு கபடி போட்டியில் இலங்கையை 34 – 25 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் நேபாளம் வெற்றிகொண்டது.
ஸ்கொஷ் போட்டிகளிலும் இலங்கைக்கு வாய்க்கவில்லை
நகோயா கிஞ்சே புட்டோ எரினா அரங்கில் நடைபெற்ற 16 பேர் சுற்று ஸ்கொஷ் போட்டிகளில் இலங்கைக்கு தோல்விகளே கிடைத்தது.
ஆண்களுக்கான போட்டியில் இந்திய வீரர் அபய் சிங்கிடம் 3 நேர் செட்களில் இலங்கை வீரர் ரவிந்து லக்சிறியும் பெண்களுக்கான போட்டியில் மலேசிய வீராங்கனை சிவசங்கரி சுப்பிரமணியத்திடம் 3 நேர் செட்களில் சனித்மா சினாலியும் தோல்விகளைத் தழுவினர்.
மேசைப்பந்தாட்டம்
டொயோட்டா ஸ்கை ஹோல் அரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான முதலாம் சுற்று மேசைப்பந்தாட்டப் போட்டியில் ஈரான் வீரர் பென்யாமின் பராஜியிடம் 4 நேர் செட்களில் சனுல் டுல்சென் தோல்வி அடைந்தார்.
துடுப்புப் படகோட்டம்
நாகரகாவா சர்வதேச பட்கோட்ட நீர்நிலையில் நடைபெற்ற ஆண்களுக்கான 2000 மீற்றர் இரட்டையர் இரட்டை துடுப்பு படகோட்ட பி குழு இறுதிச் சுற்றில் மொமஹத் நபிரான் – சம்ப்பத் சாகர ஆகிய இலங்கை ஜோடியினர் (6:44.57) மூறன்றாம் இடத்தைப் பெற்றனர். ஒட்டுமொத்த நிலையில் அவர்கள் 9ஆவது இடத்தைப் பெற்றனர்.
2000 மீற்றர் ஒற்றையர் இரட்டைத் துடுப்பு படகோட்ட பி குழு இறுதிச் சுற்றில் போட்டியிட்ட மொஹமத் நபிரான் அப் போட்டியை 7 நிமிடங்கள், 28.22 செக்கன்களில் நிறைவுசெய்து 4ஆம் இடத்தைப் பெற்றார். ஒட்டுமொத்த நிலையில் அவர் 10ஆவது இடத்தைப் பெற்றார்.
கடற்கரை கரப்பந்தாட்டம்
பெண்களுக்கான எச் குழு கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கையின் கசுனி லக்ஷானி – சத்துரிக்கா மதுஷானி ஜோடியினர் 2 நேர் செட்களில் (13 – 21, 14 – 21) தாய்லாந்தின் பச்சராபோன் சீஹாவொங் – சலிண்டா முங்கொன் ஆகிய ஜோடியினரிடம் தோல்வி அடைந்தனர்.
கிபு மாகாணம் க்றீன் விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆண்களுக்கான ஹொக்கி போட்டியில் பங்களாதேஷிடம் 1 – 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை தோல்வி அடைந்தது.












