பளை, கரந்தாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அத்துடன், காணி உரிமம் உள்ளோரை ஆவணங்களுடன் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள தடை உத்தரவுக்கான கட்டளை அறிவித்தலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.
குறித்த கட்டளை அறிவித்தலில், “பளை, கரந்தாய் தென்னை அபிவிருத்தி சபையினால் பாவிக்கப்பட்டுவரும் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு உரிமையானதுமான குறித்த காணியில் அனுமதியின்றி வெலிகளைப் பிடுங்கி, சட்டவிரோதமாக உட்புகுந்து கூடாரம் அமைத்து தங்கியிருக்கும் யாவரையும் அவ்விடத்தைவிட்டு அப்புறப்படுத்துமாறும், இந்த தடை உத்தரவை ஏப்ரல் 30ஆம் திகதி வரை அமுல்படுத்துமாறும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, காணியின் உரிமையினைக் கோருவோர், எதிர்வரும் 30ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலையாகி குறித்த காணிக்கான ஆவணத்தை சமர்ப்பித்து இதற்கான உரிமையினை கோருமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

