விஷ ஊசியால் 48 முதியவர்களை கொலை செய்த நபர்: ஜப்பானில் அதிர்ச்சி சம்பவம்
ஜப்பானில் மர்மநபர் ஒருவர் மருத்துவமனைக்குள் புகுந்து விஷ ஊசியால் 48 முதியவர்களை கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் சிகிச்சை பெற்றுவரும் முதியவர்கள் திடீரென்று மரணமடைவது அங்குள்ள மருத்துவமனை நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதும் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் குறிப்பிட்ட நபர் இந்த கொலைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிஸ் தரப்பு சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
யோக்கோகாமா பகுதியில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்த 2 முதியவர்களின் உடற்கூறு ஆய்வு முடிவுகளை ஆராய்ந்த பொலிசார் இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.
88 வயதான இந்த முதியவர்கள் இருவரும் அடுத்தடுத்த இரு தினங்களில் உயிரிழந்துள்ளனர். நரம்பு வழி ஏற்றப்பட்ட சொட்டு மருந்து வழங்கப்பட்ட பின்னரே இருவரும் உயிரிழந்துள்ளதும் பொலிசார் கண்டு பிடித்துள்ளனர்.
இதனிடையே பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் துளையிடப்பட்ட குறிப்பிட்ட சொட்டு மருந்து பைகள் 10 எண்ணிக்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மருத்துவ பயன்பாடு குறித்து உரிய முறையில் பயிற்சி பெற்ற ஒருவரே இந்த தொடர் கொலையில் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த மர்ம நபர் மருத்துவமனை ஊழியராக கூட இருக்கலாம் எனவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த யூலை மாதம் துவங்கி இதுவரை 48 முதியவர்கள் சந்தேகப்படும் வகையில் உயிரிழந்துள்ளனர். ஆனால் முதியவர்கள் உயிரிழப்புக்கு தொற்று நோய் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தை மருத்துவமனை ஊழியர்கள் நிராகரித்துள்ளனர்.
முன்னதாக டோக்கியோ நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஊனமுற்றவர்களுக்கான இல்லத்தில் புகுந்து 19 பேரை படுகொலை செய்த சம்பவத்தை அடுத்து இந்த விஷ ஊசி படுகொலை நடந்துள்ளது.