விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழியில் மர்மம்
வட்டக்கச்சி, இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள விடுதலைப் புலிகளின் நிலக்கீழ் பதுங்கு குழி அமைந்துள்ள இடத்தில் வழமைக்கு மாறான செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் குறித்த பதுங்கு குழி அமைந்துள்ள காணியில் இரண்டு சிறிய குழிகள் தோண்டப்பட்டு தேடுதல் நடவடிக்கை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
குறித்த காணியில் இன்று காலை தொடக்கம் 571வது படைப்பிரிவு இராணுவத்தினர் சிலர் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் பதுங்கு குழி அமைந்துள்ள காணி இராணுவத்தினரின் சிறிய காவலரண் ஒன்று போடப்பட்டு காவலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
எனினும் குறித்த காவலரண் ஒரு வருடத்திற்கு முன்னர் அகற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் என்றுமே வந்திராத பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் அடங்கிய குழுவினர் கடந்த ஞாயிறன்று பகல் வேளை மூன்று வாகனங்களில் வந்து இரண்டு மணிநேர தேடுதல் நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டிருந்ததாகவும்,
அதன் பின்பு நேற்றைய தினம் இனந்தெரியாதவர்களால் இரவு வேளையில் குழிகள் தோண்டப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளமை மீண்டும் ஒரு அச்ச உணர்வை தோற்றுவித்திருப்பதாக அக்கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் குறித்த சம்பவங்கள் தொடர்பான முழுமையான தகவல் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.