விஜய் மல்லையாவின் விமானம் மீண்டும் ஏலத்துக்கு வருகிறது, இம்முறை குறைந்த விலையில் தொடங்குகிறது
விஜய் மல்லையாவின் விமானத்தை மீண்டும் ஏலத்துக்கு விட சேவை வரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. இம்முறை குறைந்த விலையில் ஏலம் தொடங்குகிறது.
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதை திரும்பச் செலுத்தவில்லை.
இது தவிர அவர் இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில்(ஐ.டி.பி.ஐ.) வாங்கிய ரூ.900 கோடி கடனை வெளிநாட்டில் உள்ள தனது கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அவர் மீது மத்திய அமலாக்கத்துறை கிரிமினல் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையே தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் விஜய் மல்லையா லண்டன் சென்று விட்டார். அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கிய பிறகும், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற இங்கிலாந்து அரசு, தனது நாட்டின் சட்டவிதிகளை காரணம் காட்டி மறுத்துவிட்டது.
இதைத்தொடர்ந்து சர்வதேச போலீஸ் என்று அழைக்கப்படும் ‘இன்டர்போல்’ போலீசின் உதவியை மத்திய அமலாக்கத்துறை நாடியது. விஜய் மல்லையாவை கைது செய்ய ‘ரெட்கார்னர்’ நோட்டீசு பிறப்பிக்கும்படி கடந்த மாதம் கேட்டுக் கொண்டது. இதனையடுத்து விஜய் மல்லையாவை கைது செய்யும் விவகாரம் தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை அளிக்கும்படி அமலாக்கத்துறையை சர்வதேச போலீஸ் கேட்டுக்கொண்டு உள்ளது.
விஜய் மல்லையா கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், சேவை வரித்துறைக்கு ரூ.800 கோடிக்கு மேல் வரி பாக்கி வைத்துள்ளது. இந்த தொகையை விஜய் மல்லையா செலுத்தாததால், அவரது தனிப்பட்ட சொகுசு விமானத்தை (ஏர் பஸ் ஏ 319 ரகம்) 2013-ம் ஆண்டு, சேவை வரித்துறை ஜப்தி செய்து வைத்துள்ளது. அதை ஏல விற்பனை மூலம் விற்று குறைந்தபட்சம் ரூ.150 கோடி திரட்டி விட வேண்டும் என்பது சேவை வரித்துறையின் கனவு.
அந்த விமானத்தை ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதற்கு சேவை வரித்துறை நடவடிக்கை எடுத்தது. கடந்த 30-ந் தேதி நடந்த ஏலத்தின்போது, ரூ.152 கோடி அடிப்படை விலையாக வைத்து ஏலம் விடப்பட்டது. ஆனால் அதற்கு பெரிதான அளவில் வரவேற்பு இல்லாமல் போய் விட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஆல்னா ஏரோ டிஸ்ட்ரிபியூசனல் பைனான்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.1.09 கோடிக்கு ஏலம் கேட்ட பின்னர் யாரும் கேட்காததால் ஏலம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் அந்த விமானத்தை ஏலத்துக்கு கொண்டு வருவதற்கு சேவை வரித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்காக மும்பை ஐகோர்ட்டின் அனுமதி பெறப்பட்டுள்ளது. அனேகமாக இந்த ஏலம் அடுத்த மாதம் 21-ந் தேதி நடைபெறக்கூடும். இந்த முறை கூடுதலான நபர்களை ஏலம் கேட்க வைக்கிற முயற்சியாக அடிப்படை நிர்ணய விலை ரூ.152 கோடி என்பதை குறைப்பதற்கு சேவை வரித்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் இதில் இறுதி முடிவை இந்த துறையின் கூட்டு விலை நிர்ணய குழுதான் எடுக்கும், 10