‘வடசென்னை’ படத்தில் இருந்து சமந்தா விலகல்
‘விசாரணை’ படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் ‘வடசென்னை’. இப்படத்துக்காக சென்னை மத்திய சிறைச்சாலையை அரங்கமாக அமைத்திருக்கிறார்கள். முதற்கட்டமாக பெரும் பகுதி படப்பிடிப்பு இந்த அரங்கில் தான் நடைபெற இருக்கிறது.
தனுஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கவிருக்கும் இப்படத்தை தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரிக்க இருக்கிறது. இப்படத்தின் நாயகி வேடத்துக்கு முதலில் ஒப்பந்தமானவர் சமந்தா. ‘வடசென்னை’ படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ள இருப்பதாக பேட்டியில் கூறியிருந்தார். தற்போது, இப்படத்தில் இருந்து சமந்தா விலகியிருக்கிறார்.
இது குறித்து விசாரித்த போது, “சமந்தா ஒப்பந்தமான போது, ‘வடசென்னை’ ஒரு பாகமாக இருந்தது. ஆனால், தற்போது 3 பாகங்கள், அதிகமான நாட்கள் படப்பிடிப்பு என பெரிய படமாக மாறியிருக்கிறது. அவ்வளவு தேதிகள் கொடுக்கும் அளவுக்கு தேதிகள் இல்லை” என்று சமந்தா தரப்பில் தெரிவித்தார்கள்.
அவருடைய வேடத்தில் நடிக்க தற்போது அமலா பாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது படக்குழு. ‘வடசென்னை’ நாயகி யார் என்பது விரைவில் தெரியவரும்.