மூவரின் கொலையுடன் தொடர்புபட்ட சிறுவன் நீதிமன்றில் ஆஜர்
சஸ்கற்சுவான் உயர்தர பாடசாலை மற்றும் வீடொன்றில் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு மூவரின் மரணத்திற்கு காரணமாக அமைந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட சிறுவன் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டான்.
இளைஞர் குற்றவியல் நீதிச் சட்டத்தின் கீழ் பெயர் வெளியிடப்படாத குறித்த 17 வயது சிறுவன் மீது நான்கு முதல்தர கொலைக் குற்றச்சாட்டுக்களும் ஏழு கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி லா லோச்சே பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சகோதரர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குறித்த சிறுவன் அதே பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றினுள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தான்.
இந்த சம்பவத்தில் ஆசியர் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏழு பேர் காயமடைந்தனர். சம்பவம் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சிறுவன் உடனடியாக கைது செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.