புளோரிடாவில் மத்தேயு சூறாவளி அசுர தாண்டவம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய சூறாவளியாக பதிவாகியுள்ள மத்தேயு சூறாவளியினால், புளோரிடா மாநிலம் இயல்புநிலையை இழந்துள்ளது.
அமெரிக்க வானிலை ஆய்வு மைய அதிகாரிகளின் கருத்துக்களின் படி, காற்றானது மணித்தியாலத்திற்கு 220 கிலோமீற்றர் வேகத்தில் வீசுகின்றதாகவும், அத்தாண்டிக் வழியாக நகரும் சூறாவளி புளோரிடா மாநிலத்தை முழுமையாக தாக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு பேரழிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கருத்துக்களின் பிரகாரம், புளோரிடாவை பொறுத்தவரை கடந்த 118 வருடங்களில் அம்மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய சூறாவளி இது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறான போதும், புளோரிடா மக்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) தொடக்கம் சூறாவளி தொடர்பான அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதனால் அம்மக்கள் போதிய முன்னேற்பாடுகளுடன் இருப்பதன் காரணமாக அதிக சேதங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகின்றது.
இதேவேளை, லத்தீன் அமெரிக்க நாடுகள் பலவற்றை உலுக்கிய இச் சூறாவளியினால் இதுவரை சுமார் 350 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.