புதுக்குடியிருப்பில் மாபெரும் முத்தமிழ் விழா! திரைப்பட நடிகர் நாசர் பங்கேற்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வன்னி குறோஸ் கலாச்சாரப் பேரவையின் ஏற்பாட்டில் இன்று பிற்பகல் 4.00 மணியளவில் மாபெரும் முத்தமிழ் விழா கலைநிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், சி.சிவமோகன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில்,
பிரதம விருந்தினராக, பிரபல திரைப்பட நடிகரும் தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவருமாகிய நாசர், மற்றும் சண்முகராசா, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, ஆகாஸ் குறுப் தலைவர் எஸ் இராமசுப்ரமணியம் மற்றும் வடக்கு கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
மேற்படி நிகழ்வில் மாவீரன் பண்டார வன்னியனின் உருவத்தை நினைவுபடுத்தி புதுக்குடியிருப்பு வைத்திய சாலைக்கு முன் ஆரம்பமாகிய ஊர்வலம், 2ம் லெப்டினன் மாலதி விளையாட்டு மைதானத்தை சென்றடைந்து மைதான அரங்கில் கலை நிகழ்வுகள் ஆரம்பமாகி நடை பெற்றுக்கொண்டிருக்கின்றது.
குறித்த நிகழ்விற்கு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அவர்களுக்கு பிரதம விருந்தினராக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.