நளினியை விடுதலை செய்ய முடியாது: தமிழக அரசு அதிரடி உத்தரவு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினியின் முன்விடுதலை கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யுமாறு தமிழக அரசு கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தம்மை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, இன்று தமிழக அரசின் உள்துறை துணை செயலாளர் டேனியல் தேவஆசீர்வாதம் ஆஜராகி, பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில், 20 வருடங்கள் சிறையில் உள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கும் தமிழக அரசின் முடிவு நளினி வழக்கில் பொருந்தாது.
இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழக அரசு எந்த முடிவும் எடுக்க முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரினார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 27ம் திகதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.