தடுத்து வைக்கப்பட்டிருந்த கனடிய கல்வியாளரை விடுவித்தது ஈரான்
ஈரானில் கடந்த ஜூன் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த 65 வயதுடைய ஹோமா ஹுட்ஃபார் என்ற ஈரான் மற்றும் கனடிய இரட்டை குடியுரிமை கொண்ட கல்வியாளரை விடுதலை செய்வதாக ஈரான் நேற்று (திங்கட்கிழமை) அறிவித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் முறிவடைந்த இருநாட்டு இராஜதந்திர உறவினை மீள கட்டியெழுப்புவது குறித்து இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே இவ் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கனடிய பல்கலைக்கழகமொன்றின் முன்னாள் விரிவுரையாளரான ஹோமா சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த ஜுன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவரது சுகயீனம் உள்ளிட்ட மனிதாபிமான காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அவரை விடுதலை செய்ய தீர்மானித்துள்ளதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடத்தில் இதுவரை இரட்டை குடியுரிமை கொண்ட ஏழு பேர் ஈரான் புரட்சிகர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.