ஒபாமாவின் அரசியல் வரலாற்றில் பாரிய பின்னடைவு…
செப்டெம்பர் 11 தாக்குதல் தொடர்பில் சவூதி அரேபியா மீது வழக்கு தொடுக்க வாய்ப்பை ஏற்படுத்தும் அமெரிக்க சட்டமூலம் ஒன்று ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வீட்டோவையும் மீறி அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பெரும் தவறு என்று ஒபாமா எச்சரித்துள்ளார்.
உலகெங்கும் உள்ள தனி நபர்கள் அமெரிக்கா மீது வழக்கு தொடுக்கும் நிலைமையை ஏற்படுத்தும் ஒரு “ஆபத்தான முன்னுதாரணம்” என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமாவின் வீட்டே அதிகாரம் மீறப்படும் முதல் சந்தர்ப்பமாக கடந்த புதன்கிழமை பாராளுமன்ற வாக்கெடுப்பு அமைந்திருந்தது. எனினும் இந்த சட்டமூலம் அமெரிக்கா தேசிய பாதுகாப்பில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்று அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் இயக்குனர் ஜோன் பிரென்னன் குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்தை ஆதரிப்போருக்கு எதிரான நீதி என்ற சட்டமூலம் சட்டபூர்வமாக்கப்படுவதன் மூலம் செப்டெம்பர் 11 தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் சவூதி அரசின் எந்த ஒரு உறுப்பினர் மீதும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வழக்கு தொடுக்க முடியும்.
செப்டெம்பர் தாக்குதலில் விமானங்களை கடத்திய 19 பேரில் 15 பேர் சவூதி நாட்டவர்களாவர். எனினும் அமெரிக்காவுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருக்கும் எண்ணெய் வளம் கொண்ட அந்த நாடு தாக்குதலுடனான எந்த ஒரு தொடர்பை நிராகரித்து வருகிறது. செப்டெம்பர் 11 தாக்குதலில் 3000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
எனினும் சில விமானக்கடத்தல்காரர்களுக்கு சவூதி அரசின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். சவூதி அரச நிறுவனம் தாக்குதல்தாரிகளுக்கு நிதி உதவிகள் வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் அது குறித்து விசாரணைகளில் எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.
உலக வர்த்தக மையம், பென்டகனுக்கு வேண்டுமென்று விமானங்களை செலுத்தியே தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மற்றொரு கடத்தல் விமானம் பென்சில்வேனியாவில் விழுந்தது.
இந்நிலையில் கொங்கிரஸ் அவையில் புதனன்று வாக்கெடுப்பு இடம்பெற்றதை அடுத்து ஒபாமா சி.என்.என் தொலைக்காட்சிக்கு கூறும்போது, “இது ஒரு ஆபத்தான முன்மாதிரி” என்றார்.
இந்த சட்டம், தண்டனைக்கப்பாற்பட்ட இறையாண்மை என்ற கோட்பாட்டை நீக்கும் விதமாக உள்ளது என்றும், வெளிநாடுகளில் வாழும் அமெரிக்க படையினர் மற்றும் அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் சாத்தியக்கூறுகளை இது திறந்துவிடுவதாகவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த ஜனநாயக கட்சி உறுப்பினர் சக் ஷூமெர், இந்த சட்டம் இராஜதந்திர அசெளகரியங்களை ஏற்படுத்தி இருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நீதியை பின் தொடர அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
செனட் சபையில் 97 – 1 என்றும் பிரிதிநிதிகள் அவையில் 348 – 77 என்றும் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டமூலம் சட்டமாகவுள்ளது.
– See more at: http://www.canadamirror.com/canada/70821.html#sthash.lDSm8p86.dpuf