ஆட்சிக் கனவு பறிபோகும் அபாயத்தில் கோத்தபாயவின் கைப்பாவையாக மாறிப்போன மஹிந்த?
தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு முக்கிய போட்டியாக இருப்பது மைத்திரியோ அல்லது ரணிலோ அல்ல மாறாக கோத்தபாயவே மஹிந்தவிற்கு முக்கிய போட்டியாக இருந்து வருகின்றார்.
இந்தப் போட்டி எதிர்ப்பாக மாறக்கூடிய தருணம் ஏற்பட்டு வருவதாக அரசியல் தரப்பு அவதானிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
தற்போதைய அரசியல் களத்தில் மஹிந்தவை விடவும் கோத்தபாயவிற்கே அதிகளவிலான மக்கள் செல்வாக்கு காணப்பட்டு வருகின்றது. அதே சமயம் மஹிந்த ராஜபக்ச செயற்படுவதும் கோத்தபாயவின் கட்டளைகளின் அடிப்படையிலேயே என்றும் கூறப்படுகின்றது.
கோத்தபாய இல்லாவிட்டால் மஹிந்த இல்லை, மஹிந்தவின் செல்வாக்கு அனைத்திற்கும் பின்புலம் கோத்தபாயவே என்ற நிலையே தற்போதைய அரசியல் களத்தில் இருப்பதாகவும் அரசியல் நோக்குனர்கள் தெரிவத்து வருகின்றனர்.
அண்மையில் கோத்தபாய நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்த போது மஹிந்த தரப்பு பதறிப்போனது என்றே கூறவேண்டும். அதற்கு முன்னர் மஹிந்த அணியில் எவர் கைது செய்யப்பட்ட போதும் இல்லாத தடுமாற்றம் அன்று ஏற்பட்டது அவதானிக்கப்பட்டது.
அதே சமயம் கோத்தபாயவிற்காக 60 வழக்கறிஞர்கள் ஒரே சமயம் ஆஜராகி இருந்தனர். இது இலங்கை வரலாற்றிலேயே முதல் தடவை நிகழ்ந்த விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் தொடர்ந்தும் மௌனம் காத்து வந்த கோத்தபாய சரியான நேரத்தில் அதாவது மஹிந்தவிற்கு அரசியல் வாழ்வு அஸ்தமித்துப்போகும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட வேளையிலேயே களத்தில் குதித்துள்ளார்.
மேலும் கோத்தபாய களத்தில் இறங்கிய பின்னர் ஏற்பட்ட சடுதியான மாற்றம் மஹிந்தவிற்கு மீண்டும் அரசியல் பலத்தோடு மக்கள் மத்தியிலும் செல்வாக்கினை ஏற்படுத்தியது என்பதே உண்மை.
குறிப்பாக கோத்தபாய கூட்டு எதிர்கட்சி நடாத்திய மக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமலும் அது தொடர்பில் எந்தவித கருத்துகளும் வெளியிடாமல் அமைதியாக இருந்தும் வருகின்றார். இதேவேளை மஹிந்தவின் கருத்துகளும் வெளிப்படையற்ற கருத்துகளே.
இவற்றை தொகுத்து நோக்கும் போது மஹிந்த தரப்பின் அடுத்த திட்டம் என்ன என்பதனை தீர்மானிப்பது கோத்தபாயவே என்பது தெளிவு படுத்தப்படும்.
இதேவேளை மஹிந்தவை வெளிப்படையாக விமர்சிப்பவர்களும் கூட கோத்தபாயவை விமர்சிக்க தயங்குகின்றனர். இது அவரின் செல்வாக்கினை காட்டுகின்றது.
இதேவேளை எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி வேட்பாளராகவும் கோத்தபாய நிற்க ஆயத்தமாகி வருகின்றார். ஆட்சிக் கனவோடு வலம் வரும் மஹிந்தவிற்கு இது பெரும் சவாலாக அமையும் என்பது நிச்சயம்.
ஏற்கனவே பசிலின் ஆதரவு கோத்தபாயவிற்கே என்பதும் ஒரு பக்கம் உறுதிபடுத்தப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக மஹிந்தவிற்கு சவாலாகவும் போட்டியாகவும் அமையப் போவது கோத்தபாயவே என்றும் கூறப்படுகின்றது.
நிலைமாறிவரும் அரசியல் களத்தில் மஹிந்தவிற்கு கோத்தபாய போட்டியாக உருவாகி வருவது மஹிந்த அறிந்திருந்த போதும் அதற்கு எதிர்க்கருத்துகளை வெளிப்படுத்த அவரால் முடியாது காரணம் அவரின் செல்வாக்கும் கட்டுப்பாடும் தற்போது கோத்தபாயவிடம் இருப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த கால மஹிந்த ஆட்சியிலும் கோத்தபாயவே முக்கிய விடயங்களில் தீர்மானங்களை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.