இந்தியாவில் நடக்கவிருக்கும் 17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை பற்றிய சில சுவாரஸ்யங்கள்…
1985-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை `FIFA U-17′ உலகக்கோப்பைத் தொடரில் 16 அணிகள் பங்கேற்றன. நான்கு குரூப்களில் தலா நான்கு அணிகள் இடம்பெற்றிருந்தன. 2007-ம் ஆண்டுக்குப் பிறகு 24 அணிகள் பங்கேற்கின்றன. அந்த அணிகள், ஆறு குரூப்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த U-17 உலகக் கோப்பைத் தொடரில், அமெரிக்கா மற்றும் பிரேசில் அணிகள் அதிகமுறை பங்கேற்றுள்ளன. இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடர், அந்த அணிகளுக்கு 16-வது முறை.
மற்ற கண்டங்களைவிட ஆசியாவில்தான் அதிக முறை 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை நடந்துள்ளது. சீனா (1985), ஜப்பான் (1993), தென் கொரியா (2007) மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (2013) ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, உலகக்கோப்பையை நடத்தும் ஐந்தாவது ஆசிய நாடு, இந்தியா.
U-17 உலகக்கோப்பையை நைஜீரியா ஐந்து முறை (1985, 1993, 2007, 2013, 2015) வென்றுள்ளது. மூன்று முறை (1987, 2001, 2009) ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. ஆனால், இந்த முறை அந்த அணி உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவில்லை.
பிரேசில் மூன்று முறையும் (1997, 1999, 2003), கானா (1991, 1995) மற்றும் மெக்ஸிகோ (2005, 2011) தலா இரண்டு முறையும் வென்றுள்ளன. சோவியத் யூனியன் (1987), சவுதி அரேபியா (1989), பிரான்ஸ் (2001) மற்றும் சுவிட்சர்லாந்து (2009) அணிகள் தலா ஒருமுறை வென்றுள்ளன.
கானா தொடர்ந்து நான்கு முறை (1991, 1993, 1995, 1997) ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. அதில் இரண்டு முறை (1991, 1995) சாம்பியன்.இந்தத் தொடரில் பங்கேற்கும் 18-வது ஆசிய நாடு, இந்தியா. #BackTheBlue
இந்தியாவில் நடக்கவுள்ள இந்தத் தொடரில், இந்தியா (போட்டியை நடத்தும் நாடு), நைஜர், நியூ கேல்டோனியா ஆகிய மூன்று நாடுகள் முதன்முறையாக `FIFA U-17′ உலகக்கோப்பையில் பங்கேற்கின்றன.
`FIFA U-17′ உலகக்கோப்பையில் விளையாடிய 12 வீரர்கள், FIFA உலகக்கோப்பை ஃபைனலில் விளையாடியுள்ளனர்.
17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை, FIFA உலகக்கோப்பை என இரண்டிலும் விளையாடியவர்களில் மரியோ கோட்சே, இமான்யுல் பெடிட் மற்றும் ஆண்ட்ரஸ் இனியெஸ்டா ஆகிய மூன்று பேர் மட்டுமே, FIFA உலகக்கோப்பை ஃபைனலில் கோல் அடித்துள்ளனர்.
இரு உலகக்கோப்பைகளிலும் பங்கேற்றபோதிலும், உலகக்கோப்பை சாம்பியன் அணியின் கேப்டனாக இருந்தது ஸ்பெயின் வீரர் இகர் கஸியஸ் மட்டுமே. FIFA நடத்தும் U-17 (1997) மற்றும் FIFA World Cup Finals (2002) ஆகிய இரண்டு உலகக்கோப்பைகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம்பெற்றிருந்த ஒரே வீரர், பிரேசிலைச் சேர்ந்த ரொனால்டினோ மட்டுமே.
2011-ம் ஆண்டு, மெக்ஸிகோ சிட்டியில் உள்ள Azteca ஸ்டேடியத்தில் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ஃபைனல் நடந்தது. இதை 98,943 ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். இதுதான் அதிக ரசிகர்கள் நேரில் பார்த்த உலகக்கோப்பைப் போட்டி.
2013-ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த தொடரில்தான் அதிகபட்ச கோல்கள் அடிக்கப்பட்டடன. 52 போட்டிகளில் 172 கோல்கள். சராசரியாக ஒரு போட்டிக்கு 3.31 கோல்கள்.
1989, 1997,1999, 2007 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டிகளில் சாம்பியன் யார் என்பது, பெனால்டி ஷூட் அவுட் முறையில் தீர்மானிக்கப்பட்டது.
உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த அணிகளின் வரிசையில் பிரேசில் (166) முதல் இடத்திலும், நைஜீரியா (149) இரண்டாவது இடத்திலும் உள்ளன. 97 கோல்களுடன் உள்ள ஸ்பெயின், தற்போது நடக்கவுள்ள தொடரில் 100 கோல் இலக்கை அடையலாம். மெக்ஸிகோ 97, ஜெர்மனி 92, கானா 86 கோல்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
பிரேசில், நைஜீரியா ஆகிய இரு அணிகள் மட்டுமே உலக சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துள்ளன. 1997-ம் ஆண்டில் எகிப்தில் சாம்பியன் பட்டம் வென்ற பிரேசில் அணி, 1999-ம் ஆண்டில் நியூஸிலாந்தில் நடந்த தொடரிலும் சாம்பியன். 2013-ம் ஆண்டில் வென்ற சாம்பியன் பட்டத்தை, 2015-ம் ஆண்டில் தக்கவைத்தது நைஜீரியா.இந்தியாவில் நடக்கவுள்ள உலகக்கோப்பைத் தொடரை உலகம் முழுவதும் 185 நாடுகளிலிருந்து 20 கோடி பேர் டிவி-யில் பார்ப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. SONY TEN 2 மற்றும் SONY TEN 3 சேனல்கள் உலகக்கோப்பையை நேரடியாக ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளன.
பிரான்ஸ் வீரர் ஃப்ளோரென்ட் சினாமா பாங்காலே, 2001-ம் ஆண்டு உலகக்கோப்பையின் கோல்டன் பூட், கோல்டன் பால் இரண்டையுமே வென்றார். `ஒரே தொடரில் அந்த இரு விருதுகளையும் வென்ற முதல் வீரர்’ என்ற பெருமை பெற்றார்.
2003-ம் ஆண்டில் நடந்த 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில், கானா நாட்டைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஃப்ரெடி அடு முதல் ஹாட்ரிக் கோல் அடித்தார். அவரே 2007-ம் ஆண்டில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையிலும் ஹாட்ரிக் கோல் அடித்தார். இரு வேறு வயதினருக்கான உலகக்கோப்பையில் ஹாட்ரிக் அடித்தவர் இவர் மட்டுமே.
நைஜீரியா வீரர்கள் நான்கு பேர் `கோல்டன் பால்’ விருது வாங்கியுள்ளனர். பிலிப் ஒசுண்டோ (1987), சனி இமானுயல் (2009), கெலிச்சி இஹியனாசோ (2013), கெலிச்சி வகாலி (2015) ஆகியோர் கோல்டன் பால் விருது வென்ற நைஜீரியர்கள்.