கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலீப் மலையாள நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைதாகி சிறை சென்று, பின் ஜாமினில் வெளிவந்தார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக திலீப் மற்றும் அவரது மனைவி காவ்யா மாதவன் ஆகியோர் குறித்து பத்திரிக்கையாளர் பள்ளிசேரி என்பவர் அடிக்கடி சில வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இதில் திலீப், காவ்யா மாதவன் இருவருக்கும் காதல் அரும்பியது, மஞ்சுவாரியரை திலீப் தனது வாழ்வில் இருந்து விலக்கியது எப்படி என்பது உள்ளிட்ட பல அதிர்ச்சி தரும் செய்திகளை அவர் தொடர்ந்து கூறி வருகிறார் இதனால் கடந்த இரண்டு வருடங்களாக திலீப் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தான் இதுபோன்ற கொலை மிரட்டலுக்கு அஞ்சப் போவதில்லை என்றும், அப்படி நான் கொல்லப்பட்டால் இப்போது இருப்பதை விட திலீப்பிற்கு சிக்கல் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், திலீப் குறித்த ஆதாரங்களை, புத்தகங்களாகவும் வீடியோக்களாகவும் தனக்கு வேண்டியவர்களிடம் கொடுத்து வைத்து உள்ளேன் எனவும் கூறியுள்ளார். இருந்தாலும் தனக்கு கொடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து அவர் போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.