Easy 24 News

இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததன் காரணம்…? விளக்குகிறார் நீதன்!

இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததன் காரணம்…? விளக்குகிறார் நீதன்!

ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒன்ராரியோ புதிய சனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிடுவதற்கான நியமனத்தைத் தாக்கல் செய்துள்ள நீதன் சண் அவர்கள் அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,

சுமார் முப்பதாண்டுகள் அரசியலில் இருந்த பாஸ் பால்கிசூன் அவர்கள், சென்ற மார்ச் மாதம் எதிர்பாராத வகையிலும், எவ்வழியிலும் தெளிவுபடுத்தப்படாத பதவி விலகலாகவும் அவர் வகித்து வந்த மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

நூற்றுக்கணக்கான மக்களின் வேண்டுகோளையும் அவர்கள் தந்த ஊக்கத்தையும் கருத்தில்கொண்டு கடந்த இரண்டு மாதங்களாகக் கருத்தார்ந்த சிந்தனையில் நான் ஈடுபட்ட பின்பு ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒன்ராரியோ புதிய சனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிடுவதற்கான நியமனத்தைத் தாக்கல் செய்துள்ளேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதுடன் அதற்காக நடைபெறவிருக்கும் கூட்டத்துக்கு வருகை தருமாறும் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கின்றேன்.

நியமனக் கூட்டம்
காலம்: வியாழக்கிழமை, மே மாதம் 26ஆம் திகதி மாலை 6.30 மணி
இடம்: 4651 செப்பேர்ட் அவெனியு கிழக்கு, யுனிட் 102
(மக்கோவன் ரூ செப்பேர்ட் தென்கிழக்கு மூலை)

முக்கியமான பிரச்சனைகளில், குறிப்பாகக் கல்வி சம்பந்தமான பிரச்சனைகளில் தங்களின் சார்பாக ஒரு வலிமை வாய்ந்த குரலாக ஒலிப்பதற்கு இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு கடந்த பல வாரங்களாக இந்தத் தொகுதியிலுள்ள பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து வந்து என்னிடம் கோரிக்கை விடுத்தார்கள்.

எமது சமூகத்திலும் மாகாணத்திலுமுள்ள இளைஞர்களின் சிறப்பான எதிர்காலத்துக்குக் கல்விதான் ஒரு நுழைவாசல் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். லிபரல் அரசாங்கம் மேற்கொண்ட நிதிக் குறைப்பு எமது சமூகத்திலுள்ள குழந்தைகளையும், குடும்பங்களையும் பலவழிகளிலும் பாதித்து இருக்கின்றதென்பதை ஒரு தந்தை என்ற வகையிலும், கல்விச் சபை உறுப்பினர் என்ற ரீதியிலும் நன்கு அறிந்து கொண்டுள்ளேன்.

எமது சமூகத்திலும் மாகாணத்திலுமுள்ள ஒவ்வொரு மாணவருக்கும் உயர்ந்த தரமுடைய கல்வியைப் பெற்றுக்கொடுக்கின்ற வகையில் குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக ஒன்ராரியோ மாகாண சபைக்குள்ளே என்னால் போராட முடியும் என்ற காரணத்தால் நான் இந்தத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன்.

உங்களின் பிரச்சனைகளில் தோள் கொடுக்கின்ற, உங்கள் குடும்பங்களுக்காக வாதாடக் கூடிய, உங்களின் குழந்தைகளின் கல்விக்காகக் குரல் கொடுக்கக் கூடிய, உங்களில் ஒருவராக இருந்து உங்களின் நம்பிக்கைக்குப் பின்நின்று உழைக்கக் கூடிய ஒரு மாகாண சபை உறுப்பினர் ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதிக்குத் தேவையாக இருக்கிறது.

19 வேட்பாளர்கள் போட்டியிட்ட, கல்விச் சபைக்கான கடந்த இடைத் தேர்தலில் எனக்கு அடுத்து வந்த வேட்பாளர் 16 வீதமான வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில் 53வீதமான வாக்குகளை நீங்கள் எனக்கு அளித்து அமோகமான வெற்றியைத் தந்தீர்கள்.

உங்களின் கல்வி சம்பந்தமான பிரச்சனையில் ஒரு பலமான குரலாக ஒலிப்பதற்கான ஆணையை எனக்கு அளித்ததற்காக உங்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அந்த ஆணையை மிகுந்த மதிப்புடனும் பொறுப்புடனும் ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கல்விச் சபை உறுப்பினராகப் பணியாற்றுவேன். இத்தொகுதியிலுள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அவர்களுக்கு உரியவற்றைப் பெற்றுக்கொடுப்பதில் நான் உறுதி கொண்டுள்ளேன்.

புதிய சனநாயகக் கட்சியில் வேறு வேட்பாளர்கள், நியமனத்துக்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்யாதபடியால் நியமனக் கூட்டத்தில் எனது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நியமனம் அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். வரும் கோடை காலத்தில் தேர்தல் நடத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதால் தேர்தல் நடக்கவிருக்கும் காலத்தில் ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொள்ள இருக்கின்றேன்.

2011இலும், 2014இலும் நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிட்ட இரு தடவைகளிலும் உங்களின் பலமான ஆதரவுடன் 13,000க்கு அண்மித்த வாக்குகளைப் பெற்றிருந்தேன். 2014இல் என்னுடன் 600க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிதால் வெற்றிக் கோட்டை அண்மித்திருந்தேன்.

இத்தேர்தலில் மாகாணசபை உறுப்பினராகப் பதவிவகிக்கின்ற ஒருவர் போட்டியிடாத நிலையில், ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியில் புதிய ஜனநாயகக் கட்சி வெற்றி பெறுவதற்கும் சமுதாய முன்னேற்றச் சிந்தனை கொண்ட ஒரு தலைமையைக் கொண்டுவருவதற்குமான உறுதியான ஒரு வாய்ப்பு எமக்கு இருக்கிறது. நீங்கள் எனக்கு எப்பொழுதும் தொடர்ந்து தருகின்ற ஆதரவுக்கு மீண்டும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *