கிரிக்கெட் ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் ஐ.பி.எல் -11 சீசன் (IPL2018) வரும் சனிக்கிழமை தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் கோப்பை அறிமுக விழாவுக்குப் பின், இரவு 8 மணிக்கு தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ், இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து களமிறங்க உள்ளது.
ஐ.பி.எல் தொடங்குவதற்கு சில நாட்களே இருக்கும் நிலையில், சில முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விலகி இருக்கின்றனர். இதனால் கடைசி நேரத்தில் மாற்று வீரர்களை அணிகள் அறிவித்து வருகின்றன. இதில் ஸ்மித், வார்னரைத் தொடர்ந்து, ஐ.பி.எல்- தொடரில் இருந்து ஸ்டார்க், கூல்டர் நைல், பெஹரன்டார்ஃப் ஆகியோரும் காயம் காரணமாக விலகியுள்ளனர். இவர்களுக்குப் பதிலாக ஐ.பி.எல் ஏலத்தில் விலைபோகாத டாம் குர்ரான் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் (இங்கிலாந்து), கோரி ஆண்டர்சன் மற்றும் மிட்ச்செல் மெக்லீனகன் (நியுசிலாந்து), தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஹெய்ன்ரிச் கிளாஸன் உள்ளிட்டோர் ஐ.பி.எல்- தொடரில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்.