21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதன் முதல் நாளான நேற்று இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் கிடைத்தன.
பளு தூக்குதல் போட்டியின், மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில், உலக சாம்பியனான மீராபாய் சானு தங்க பதக்கமும், ஆண்கள் 56 கிலோ எடைப்பிரிவில் குருராஜா வெள்ளி பதக்கமும் வென்றனர். முதல் நாளிலேயே 2 பதக்கங்கள் கிடைத்ததால், இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற 2வது நாள் போட்டிகளில், இந்தியாவுக்கு 2வது தங்க பதக்கம் கிடைத்தது. இதனை பளு தூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு, 53 கிலோ எடைப்பிரிவில் வென்று தந்தார்.
பளு தூக்குதல் போட்டியானது ஸ்னாட்ச், க்ளின் மற்றும் ஜெர்க் என 2 பிரிவுகளாக நடத்தப்படும். இதன்படி ஸ்னாட்ச் பிரிவில் 84 கிலோ எடையையும், க்ளின் மற்றும் ஜெர்க் பிரிவில் 108 கிலோ எடையையும் சஞ்சிதா சானு தூக்கினார்.
2 பிரிவுகளிலும் சேர்த்து மொத்தமாக 192 கிலோ எடையை தூக்கியதன் மூலம், முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தை தட்டி சென்றார். காமன்வெல்த் போட்டிகளில் சஞ்சிதா சானு தொடர்ச்சியாக வென்ற 2வது தங்க பதக்கம் இதுவாகும்.
இதற்கு முன்பாக 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில், சஞ்சிதா சானு தனது முதல் தங்க பதக்கத்தை வென்றிருந்தார். ஆனால் அப்போது 48 கிலோ எடைப்பிரிவில் தங்க பதக்கத்தை கைப்பற்றினார்.
இம்முறை 53 கிலோ எடைப்பிரிவில் தங்க பதக்கத்தை தட்டி சென்றுள்ளார். முன்னதாக 53 கிலோ எடைப்பிரிவு பளு தூக்குதல் போட்டிக்கான வெள்ளி பதக்கத்தை, பாப்புவா நியூ கினியா நாட்டின் லா டிகா டுவா வென்றார்.
நடப்பு சாம்பியனான அவர் ஸ்னாட்ச், க்ளீன் மற்றும் ஜெர்க் என 2 பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 182 கிலோ எடையை தூக்கினார். வெண்கல பதக்கத்தை கனடாவின் ராச்செல் லெப்லான்க் பாசினெட் கைப்பற்றினார்.
அவர் ஸ்னாட்ச், க்ளீன் மற்றும் ஜெர்க் என 2 பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 181 கிலோ எடையை தூக்கினார்.
கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் தற்போது வரை இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி என மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது.
அவை மூன்றையும் பளு தூக்கும் வீரர், வீராங்கனைகளே வென்றுள்ளனர். மீராபாய் சானுவை போல் சஞ்சிதா சானுவும் மணிப்பூரை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.