இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் உலகின் மிகச்சிறந்த துடுப்பாட்ட வீரருமான மஹேந்திர சிங் தோனி நேற்றைய தினம் இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை இராணுவ சீருடையில் வந்து பெற்றுக்கொண்டார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்ம விபூஷன், பத்மபூஷன் விருதுகளை வழங்கி கௌரவிக்கப்படும்.
அந்தவகையில் நேற்று இடம்பெற்ற விருது வழங்கும் விழாவில் தோனி பத்மபூஷன் விருதினை அந்நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையால் பெற்றுக்கொண்டார்.
இதில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் என்னவென்றால் தோனி இவ்விருது விழாவுக்கு இராணுவ உடையில் சென்றது. பொதுவாக இவ்விருது விழாக்களுக்கு செல்வோர் அந்நாட்டு கலாச்சாரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உடை அணிந்து செல்வார்கள்.
இல்லாவிடில் தத்தமது துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடை உடுத்திச் செல்வார்கள். அனால் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக திகழும் தோனி இவ்விழாவுக்கு இராணுவ உடையில் வந்தது அனைவருக்கும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கான காரணம் என்னவெனில், கிரிக்கட் உலகக் கோப்பை கிண்ணத்தை இந்திய அணி 2011 ஆம் ஆண்டு வெற்றிபெற்றிருந்தது. இவ் இமாலய சாதனையை இந்திய அணி நிகழ்த்திய பொது அவ்வணியின் தலைவராக தோனி இருந்தார்.
இதனை கௌரவிக்கும் முகமாக 2011ஆம் ஆண்டு நவம்பர் 01ஆம் திகதி இந்திய இராணுவத்தினால் தோனிக்கு லெப்டினன் கேணல் என்ற சிறப்புப் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. இதனை பிரதிபலிப்பதற்காகவே தோனி இராணுவ உடையில் தோன்றியிருந்தார்.
தோனி யின் சிறப்பம்சம் என்னவெனில் இவர் அணித்தலைவாக பொறுப்பேற்கும் எந்த போட்டியானாலும் வெற்றி நிச்சயம். இது நாட்டின் அணித் தலைவராகவும் இருந்து தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ்சின் தலைவராகவும் இருந்து வெற்றி மேல் வெற்றி குவித்து வருகிறார் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்க விடயமாகும்.