Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

103 பந்துகளில் 7 ரன்கள்… பட்டையைக் கிளப்பிட்டான்ல..!

April 3, 2018
in Sports
0

டி-20, டி-10, ஐஸ் கிரிக்கெட் வரை பார்த்துவிட்ட கிரிக்கெட் ரசிகர்கள், இன்று சர்வதேச ‘பாக்ஸ் கிரிக்கெட்’ ஆட்டத்தையும் பார்த்திருப்பார்கள். நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் ஆடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி செஷன் அப்படித்தான் இருந்தது. பேட்டைச் சுற்றி 8 ஃபீல்டர்கள். பந்து பேட்டைத் தொட்டு ‘எட்ஜ்’ ஆனால் பிடிப்பதற்காக ஒற்றைக்காலில் காத்திருக்கிறார்கள். தூக்கி அடித்தாலும் முடிந்தது. பந்தை விடவும் முடியாது… யார்க்கர்கள் தாக்குகின்றன. உடலாலும் வாங்க முடியாது. எல்.பி ஆக வாய்ப்புண்டு. தோல்வி அருகாமையில் இருப்பதால் நெருக்கடி வேறு. இத்தனையையும் சமாளிப்பது ஒரு தேர்ந்த பேட்ஸ்மேனுக்கே கடினம். ஆனால், இரண்டு டெய்ல் எண்டர்கள்… இங்கிலாந்து பௌலர்களைக் கதறவைத்து 31.2 ஓவர்கள் தண்ணி காட்டி, போட்டியையும் தொடரையும் நியூசிலாந்துக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறார்கள். #NZvENG

ஒருபக்கம் ஐ.பி.எல் பரபரப்பு, இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்க தொடர்… இவை இரண்டுக்கும் இடையில் பரபரப்பே இல்லாமல் நடந்துகொண்டிருந்தது நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர். முதல் போட்டியில் ட்ரென்ட் போல்ட், டிம் சௌத்தி இருவரும் மிரட்டியதால் அதிரடியாக வெற்றி பெற்றிருந்தது நியூசிலாந்து. இரண்டாவது (கடைசி) போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடந்தது. இங்கிலாந்து பேட்டிங். இந்தமுறையும் சௌத்தி – போல்ட் கூட்டணி மிரட்டியது. 94-5. ஆனால், ஜானி பேர்ஸ்டோ – மார்க் வுட் கூட்டணி பட்டையைக் கிளப்பியதால் 307 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து 278 ரன்களுக்கு ஆல் அவுட்.இரண்டாவது இன்னிங்ஸை மாஸாகத் தொடங்கியது ‘த்ரீ லயன்ஸ்’. குக் தவிர, டாப்-5 பேட்ஸ்மேன்கள் அனைவருமே அரைசதம் அடித்தனர். 352 ரன்கள் குவித்தது இங்கிலாந்து. 382 என்ற ‘டஃப் டார்கெட்’. 4 செஷன்கள் இருக்கிறது. நான்காவது இன்னிங்ஸில், பெரிய ஸ்கோரை சேஸ் செய்து, 4 செஷன்கள் தாக்குப்பிடிப்பது என்பது மிகவும் கடினம். ஆனால், நிதானமாக ஆடினார்கள் நியூசி பேட்ஸ்ன்மேன்கள். 4-வது நாள் ஆட்டம் முடியும்போது விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள். இன்னும் ஒருநாள் சமாளித்தால் போதும், தொடரை வென்றுவிடலாம்.

ஆனால், 5-வது நாளை அதிரடியாகத் தொடங்கினார் ஸ்டுவார்ட் பிராட். 23 ஓவர்கள் நிதானமாக ஆடிய தொடக்க ஜோடியை, ஐந்தாவது நாளின் முதல் பந்திலேயே காலி செய்தார். ஜீத் ரேவல் அவுட். இரண்டாவது பந்து… டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவர் – வில்லியம்ஸன்… அவுட்! முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகள். நியூசிலாந்து மிரண்டுவிட்டது. அடுத்த 7-வது ஓவரில் ராஸ் டெய்லரும் வெளியேறுகிறார். 83 ஓவர்களில் 7 விக்கெட்டுகளைக் காப்பற்றவேண்டிய நிலை. இனி இங்கிலாந்தை சமாளிப்பது கடினம்.. அந்த நாளை மீட்பது கடினம்.. இந்தப் போட்டியைக் காப்பற்றுவதும் கடினம்.

உணவு இடைவேளையின்போது நியூசிலாந்தின் ஸ்கோர் 124-4. இரண்டாவது செஷன் தொடங்கி, 6-வது ஓவரில் மீண்டுமொரு விக்கெட். இடைவெளியே இல்லாமல் பெவிலியன் திரும்பிக்கொண்டிருந்தது நியூசிலாந்து மிடில் ஆர்டர். ஓப்பனர் லேதம் மட்டும் போராடிக்கொண்டிருந்தார். ஒருவழியாக டிகிராந்தோம் அவருக்குக் கொஞ்சம் சப்போர்ட் செய்தார். உணவு இடைவேளைவரை சீராக ரன் சேர்த்த லேதம், அதன்பிறகு விக்கெட்டைக் காப்பற்றுவதில் மட்டும் குறியாக இருந்தார். ஆனால், அவரும் கொஞ்சம் அவசரப்பட, டெய்ல் எண்டர்களுக்கான என்ட்ரி ஓப்பன் ஆனது. சோதி கொஞ்சம் நிலைத்து ஆடினார். இரண்டாவது செஷன் முடிந்தது.

96 பந்துகள் பொறுமையைக் கடைபிடித்த டிகிராந்தோம், ஒரு நொடி நிதானத்தை இழந்துவிட, 7-வது விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து. இனி தேர்ந்த பேட்ஸ்மேன்களே இல்லை. குறைந்தபட்சம் 20 ஓவர்களாவது விளையாடவேண்டும். மூன்றே விக்கெட்டுகள்தான். இங்கிலாந்து வீரர்கள் கொஞ்சம் குஷியாகினர். 22 மாதங்களுக்குப் பிறகு அயல்நாட்டு மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறப்போகிறார்கள் என்றால் சந்தொஷப் படுவதில் தவறில்லையே! ஆனால், ‘பிளாக் கேப்ஸ்’ ஓய்ந்துவிடவில்லை. ஈஷ் சோதி – நீல் வேக்னர் ஜோடி, இங்கிலாந்து அணியின் வெற்றிக் கனவை உருக்குலைதது.

சோதிகூட அவ்வப்போது ‘ஸ்கோரிங் ஷாட்’கள் அடித்துக்கொண்டிருந்தார். ஆனால், வேக்னர்..! ‘பொறுமை, பொறுமை… பொறுமையோ பொறுமை’ mode தான். பந்தை கவனிக்கவேண்டும், தரையோடு தரையாக அதைப் பார்சல் செய்து அனுப்பவேண்டும். அது மட்டும்தான் அவர் வகுத்துக்கொண்ட அசைன்மென்ட். எந்தவொரு பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஃபீல்டிங் செட்-அப் பார்த்துத்தான் விளையாடுவார்கள். அது 11-வது வீரராகக் களமிறங்குபவராய் இருந்தாலும். ஆனால், வேக்னர் அதைப்பற்றியெல்லாம் கவலையே கொள்ளவில்லை. பந்தைத் தரையோடு அடிக்க ஃபீல்டர் எங்கு நின்றால் என்ன?

சோதி – ஒரு தேர்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் போல் விளையாடினார். ஸ்ட்ரோக்குகள் ஒவ்வொன்றும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்துகளை யோசிக்காமல் விட்டார். அதேசமயம், பட்டென்று இன்ஸ்விங் ஆகும் ஆண்டர்சனின் பந்துவீச்சையும் லாவகமாக எதிர்கொண்டார். வேக்னர் ஓரளவு க்ரீசில் செட் ஆனதும், ஸ்ட்ரைக் ரொடேட் செய்யவும் தொடங்கினார். அதனால், இங்கிலாந்து பௌலர்கள் விரக்தியடைந்தனர்.

இந்த பார்ட்னர்ஷிப் நீண்டுகொண்டே இருந்தது. அவ்வப்போது ஸ்லிப்பில் சில கடினமான கேட்ச்கள் வரவும் செய்தது. ஆனால், அதை அவர்களால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஆட்டத்தின் இறுதி நெறுங்க நெறுங்க, பேட்ஸ்மேனைச் சுற்றி ஃபீல்டர்களை நிரப்பினார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட். இரண்டு ஸ்லிப், கல்லி, ஷார்ட் லெக், சில்லி மிட்-ஆன், சில்லி மிட்-ஆஃப், சில்லி பாயின்ட் என இங்கிலாந்து வீரர்கள் ரவுண்டு கட்டி நின்றனர். வழக்கமாக நிற்கும் ஃபீல்டிங் பொசிஷனில் நில்லாமல், முட்டி போட்டெல்லாம் ஃபீல்டிங் செய்தார்கள். இதில் உச்சகட்டக் கொடுமை என்னவென்றால், வேகப்பந்துவீச்சாளர்களின் ஓவர்களிலும் ஃபீல்டர்கள் அப்படியே நின்றிருந்தனர்.

இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக இருக்கும், அவர்களின் ரசிகர் படையான ‘பார்மி ஆர்மி’ நியூசி பேட்ஸ்மேன்களை வெறுப்பேற்ற பாடல்கள் பாடிக்கொண்டே இருந்தது. நியூசிலாந்து ரசிகர்கள் ஒவ்வொரு டாட் பாலுக்கும் கைதட்டிக்கொண்டே இருக்க, அந்த பாக்ஸ் மேட்ச், டி-20 போல் பரபரப்பாக இருந்தது. ரூட் அனைத்து பௌலர்களையும் உபயோகித்து, நியூசிலாந்தை வெரைட்டியாக மிரட்டியது. வுட் வீசும் பௌன்சர்கள், ஆண்டர்சனின் ஸ்விங், பிராடின் சீம், ரூட் வீசும் ஆஃப்-பிரேக், லீச்சின் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின், மாலனின் லெக் ஸ்பின் என எல்லா ஆப்ஷன்களையும் முயற்சி செய்தார் ரூட். எதற்கும் பலனில்லை.

சோதி 3 மணி நேரம் களத்தில் நின்று சோதித்தார். ஆனால், அதைவிட அவர்களைச் சோதித்தது வேக்னர்தான். களமிறங்கிய பிறகு சோதியை விட இவரே அதிக பந்துகளை எதிர்கொண்டார். அந்த நாளுக்கான 90 ஓவர்கள் முடிந்து, கூடுதல் ஓவர்களும் வீசத் தொடங்கினர். ஊஹும்… அவர்களைப் பிரிக்கவே முடியவில்லை. சோதி 168 பந்துகளில் 56 ரன்கள். வேக்னர் 103 பந்துகளில் 7 ரன்கள். இவர்கள் இருவரும் மட்டும் 31.2 ஓவர்கள் நின்றனர். வேக்னரை ஒருவழியாக ரூட் அவுட்டாக்கினார். வெளிச்சம் இல்லை என நடுவர்கள் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர். பௌலர்கள் இருவர் நியூசிலாந்துக்கு இந்தப் போட்டியைக் காப்பாற்றிக்கொடுத்துவிட்டனர். அதுவும் ஒரு மாரத்தான் பெர்ஃபாமன்ஸ் மூலம். வெறும் 7 ரன்கள் எடுத்த ஒரு பேட்ஸ்மேன், ஸ்டேண்டிங் ஒவேஷனோடு வெளியேறினார்.

Previous Post

தொடரை வென்றது நியூசிலாந்து!

Next Post

பத்மபூஷன் விருதை பெற தோனி இராணுவ உடையில் சென்றது ஏன்?

Next Post

பத்மபூஷன் விருதை பெற தோனி இராணுவ உடையில் சென்றது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures