ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, வரலாற்று சிறப்பு மிக்க 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2–0 என முன்னிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் பெர்த்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 403, ஆஸ்திரேலியா 662/9(‘டிக்ளேர்’) ரன்கள் எடுத்தன. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில், 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. மலான் (28), பேர்ஸ்டோவ் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம், மழை மற்றும் மைதான ஈரப்பதம் காரணமாக தாமதமாக துவங்கியது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்தின் மலான் அரைசதமடித்தார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ பேர்ஸ்டோவ் (14) போல்டானார். நாதன் லியான் ‘சுழலில்’ மொயீன் அலி (11) சிக்கினார். தொடர்ந்து அசத்திய ஹேசல்வுட், மலான் (54), கிரெய்க் ஓவர்டன் (12) ஆகியோரை அவுட்டாக்கினார். பின், கம்மின்ஸ் பந்தில் ஸ்டூவர்ட் பிராட் (0), வோக்ஸ் (22) சரணடைந்தனர்.
இரண்டவாது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 218 ரன்னுக்கு சுருண்டு, இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. ஆண்டர்சன் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஹேசல்வுட் 5 விக்கெட் கைப்பற்றினார்.