ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் இன்று பெர்த்தில் துவங்குகிறது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதல் இரு போட்டியில் இங்கிலாந்து அணி வீழ்ந்தது. ஆஸ்திரேலியா 2–0 என, முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட், இன்று பெர்த்தில் துவங்குகிறது. இதில் கட்டாயம் வென்றால் மட்டுமே, ஆஷஸ் கோப்பை கைவிட்டுப் போகும் நிலையை தடுக்க முடியும் என்ற நிலையில், இங்கிலாந்து களமிறங்குகிறது.
வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் பெர்த் மைதானம், இங்கிலாந்து அணியின் ‘புதைகுழி’ என்று வர்ணிக்கப்படுகிறது. கடந்த 1978ல் இங்கு நடந்த டெஸ்டில் வென்ற பின், இங்கு விளையாடிய 10 போட்டிகளில் ஒன்றில் கூட, இங்கிலாந்து (8 தோல்வி, 2 ‘டிரா’) வெல்ல முடியவில்லை. அதிலும் கடைசி 7 டெஸ்டில் மிகப்பெரிய வித்தியாசத்தில் தோற்றுள்ளது. இத்துடன், ஆண்டர்சன் மீது மதுவை ஊற்றிய பென் டக்கெட் ‘சஸ்பெண்ட்’ விவகாரமும் சேர்ந்துள்ளதால், ஜோ ரூட் தலைமையில் இங்கிலாந்து எழுச்சி பெறுவது சந்தேகம் தான். ஸ்டோன்மேன், அனுபவ மொயீன் அலி, வோக்ஸ் கைகொடுத்தால் நல்லது.
முதல் டெஸ்டில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி, பின் ஸ்மித், வார்னர், பான்கிராப் உள்ளிட்டோர் உதவியால் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ், ‘சுழல்’ வீரர் ‘சீனியர்’ நாதன் லியான் உதவி தொடரும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எளிய வெற்றி மட்டுன்றி, ஆஷஸ் கோப்பையும் காத்திருக்கிறது.