கால்பந்து சீசன் வந்துவிட்டது. கால்பந்து வெறியர்கள் வெறிகொண்டு கிளம்பிவிட்டனர். சென்னை மட்டுமன்றி மொத்த தேசமும் ஐ.எஸ்.எல் (ISL) தொடருக்குத் தயாராகிவிட்டது. எட்டு அணிகள் இப்போது பத்து அணிகளாகிவிட்டது. 2 மாதத் தொடர் இப்போது 5 மாத சீசன் ஆகிவிட்டது. இனி ஐ.எஸ்.எல் தொடரும் ஐரோப்பாவின் மிகப்பெரிய தொடர்களுக்கு சவால் விடும். ஏற்கெனவே ‘அட்டெண்டன்ஸ்’ விஷயத்தில் ஐரோப்பிய லீக்குகளைப் பின்னுக்குத்தள்ளிவிட்டோம். இனி கால்பந்தின் தரத்திலும் முன்னேற்றம் காண வேண்டும். இன்று இரவு அதற்கான முதல் அடி கொச்சியில் எடுத்துவைக்கப்படுகிறது. நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், கடந்தமுறை அவர்களிடம் ஃபைனலில் வீழ்ந்த கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த முறை எந்த அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. எந்த அணிகள் பலவீனமாக இருக்கின்றன. சென்னையின் FC அணியின் வாய்ப்பு எப்படி இருக்கிறது. ஒரு பார்வை…
பெங்களூரு FC
ஐ லீக்கில் இருந்து ஐ.எஸ்.எல் தொடருக்கு என்ட்ரி கொடுத்துள்ளது பெங்களூரு அணி. இளமை, அனுபவம் இரண்டும் நிரம்பி வழிகிறது. இந்தியக் கேப்டன் சுனில் சேத்ரிதான் கேப்டன். ஆனால், அவரைத் தாண்டியும் அணியில் ஸ்டார் வீரர்கள் நிறைந்திருப்பது பெங்களூருவை சாம்பியன் ரேஸின் முக்கியப் போட்டியாளராக்குகிறது. ஐ லீக் தொடரில் இணைந்து விளையாடிய வீரர்களே அதிகம் இருப்பதால், வீரர்களின் கெமிஸ்ட்ரி நிச்சயம் அணிக்குப் பிளஸ். மார்க்கீ ப்ளேயர் வேண்டும் என்று மற்ற அணிகள் போல் வயதான வீரர்களை வாங்காததே அணியின் தரத்தைச் சொல்கிறது. பயிற்சியாளர் ஆல்பர்டோ ரோகோ கடந்த ஓராண்டாக அணியுடன் பயணிக்கிறார். வீரர்களை நன்கு அறிந்தவர். கோல்கீப்பராக, இந்திய அணியின் குர்ப்ரீத் சிங் சாந்து இருப்பதுவும் பெரிய பலம். கன்சிஸ்டென்டாக ஆடினால் முதல் சீசனிலேயே கோப்பையை முத்தமிடலாம்.