வரும் டிசம்பர் இறுதியில் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் கமல் ஹாஸன், அனைத்துத் தரப்பினரையும் சந்திக்கிறார். அரசியல் கட்சியை வரும் ஜனவரியில் தொடங்கப் போவதாக அறிவித்த கமல் ஹாஸன், அதற்கு முன் மாவட்டவாரியாக சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்திக்கப் போவதாக அறிவித்தது நினைவிருக்கலாம். கட்சி தொடங்குவதற்கு ரூ 30 கோடி தேவை என்றும், அதை மக்களிடமிருந்தே பெறப்போவதாகவும் கமல் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் டிசம்பர் இறுதி வாரத்தில் அவர் தனது சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் என அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. கமல் ஹாஸன் தனது பயணத்தை எந்த மாவட்டத்திலிருந்து முதலில் தொடங்குவது என்பது குறித்து மன்றத்தினருடன் கலந்து ஆலோசித்து வருகிறார். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.