நாட்டுக்காக ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும் 120% பங்களிப்பு செய்யும் முனைப்புடன் களமிறங்குவதாகத் தெரிவித்த கேப்டன் விராட் கோலி, அவ்வாறு தீவிரமாக செயல்படாவிட்டால் தன் ஆட்டமே ஒன்றுமற்றதாகி விடும் என்று கூறியுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”ஒரு அணியாக வெற்றி பெற ஒவ்வொரு பந்துமே ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இதற்காக களத்தில் 120% பங்களிப்பு செய்கிறேன். நான் இயல்பிலேயே அப்படித்தான், எனவே நான் கடினமாக உழைத்தாக வேண்டும். களத்தில் நான் தீவிரமாக செயலாற்றாவிட்டால் என் ஆட்டமே கூட ஒன்றுமற்றதாகி விடும். இதனால்தான் என்னுடைய உடற்தகுதி மீது அதிக ஈடுபாடு காட்டி வருகிறேன், இதனால் இத்தகைய விஷயம் என்னுடன் கூடப்பிறந்த 2-வது இயல்பாகவே மாறிவிட்டது.
நான் கிரிக்கெட் பயிற்சி அமர்வைக்கூட துறப்பேன், ஆனால் உடற்பயிற்சி அமர்வை ஒரு போதும் துறக்க மாட்டேன். இது எனக்கு அவ்வளவு முக்கியமாகி விட்டது.
என்னைப் பொறுத்தவரையில் எனக்கு அனைத்தையும் வழங்கியுள்ள ஆட்டத்துக்கும் இந்த அணிக்காகவும் நான் என் கடமையை ஆற்றுவதே முக்கியமானது. எனவே என்னைப்பற்றி என்ன எழுதுகிறார்கள், பேசுகிறார்கள் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனெனில் அத்தகைய கருத்துக்களால் ஒரு பயனும் இல்லை.
2 போட்டிகளில் சரியாக ஆடவில்லை எனில் நாம் நன்றாக ஆடிய விஷயங்கள் ஜன்னல் வழியே தூக்கி எறியப்படும் என்பதை நான் அறிந்தேயிருக்கிறேன். ஆனால் இழந்த புகழ் மீண்டும் விரைவிலேயே திரும்பும் என்பதையும் நான் அறிவேன். எனவே எந்த ஒரு தனிநபருக்கும் விமர்சனம் ஒரு பொருட்டல்ல, குறிப்பாக எனக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல.
என் மீதே எனக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. என்னுடைய திறமைக்கேற்ப என்னைத் தயாரித்து கொள்கிறேன். ஒவ்வொரு முறை பேட்டிங்கில் இறங்கும் போதும் சதமடிப்பதல்ல எதிர்பார்ப்பு, ஒவ்வொரு முறையும் சதமடிப்பது இயலாத காரியம், ஏனெனில் அணியில் மற்ற 10 வீரர்கள் ஆடுகிறார்கள். இன்னொரு 11 வீரர்கள் கொண்ட அணியை எதிர்கொள்கிறோம். எனவே நான் தனியனாக போர்வீரனாக களத்தில் போராடுகிறேன் என்பதெல்லாம் அறவே இல்லை.
எந்த ஒரு போட்டியையும் சுலபமாக எடுத்துக் கொள்வதும் இல்லை, களத்தில் தீவிரமாக செயல்படாத நபரும் நான் அல்ல” இவ்வாறு கூறியுள்ளார் விராட் கோலி.